மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் பாடசாலை அதிபர் மற்றும் ஆளணி வெற்றிடங்களை நிரப்புமாறு இ.ஆ. சங்கம் வேண்டுகோள்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களையும் மற்றும் ஆளணி வெற்றிடங்களையும் நிரப்ப உடனடி நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கிழக்கு மாகாண ஆளுநரைக் கேட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் திங்கட்கிழமை 02.04.2018 அதிகாரிகளுக்கு வேண்டுகோள் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளதாக அதன் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஆளுநர், கிழக்கு மாகாணக் கல்விச் செயலாளர், மாகாண ஆளுனரின் செயலாளர், மாகாண பிரதம செயலாளர், கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர், மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோருக்கு அந்த வேண்டுகோள் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி, இந்துக் கல்லூரி, கல்லடி விபுலாநந்தா வித்தியாலயம், கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலயம், சென் ஜோசெப் வாஸ் வித்தியாலயம் ஆகியவற்றிலும், பட்டிருப்பு கல்வி வலயத்தில்@ செட்டிப்பாளையம் மகா வித்தியாலயம், காக்காச்சிவெட்டை விஷ்ணு வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்களும் மேலதிக ஆளணியினருக்கான வெற்றிடங்களும் காணப்படுகின்றன.

எனவே, கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காகவும், கல்விப் பின்னடைவைத் தவிர்ப்பதற்காகவும் இந்த அதிபர்கள் உள்ளிட்ட ஆளணி வெற்றிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.

மேலும் இந்த வெற்றிடங்கள் நிரப்பப்படும்போது 1998/23 ஆம் இலக்க கல்வி அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாகவும் தாபன விதிக்கோவை அத்தியாயம் ii இற்கமைவாகவும் 1589/30 அதிவிஷேட வர்த்தமானியின் ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கமைவாகவும் சேவைப் பிரமாணக்குறிப்பிற்கமைவாகவும் வெளிப்படைத்தன்மையான நியமிப்புக்களைச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]