மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறுத்தல் மற்றும் அளத்தல் கருவிகளுக்கு சட்டபூர்வ முத்திரை இடும் பணிகள் ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறுத்தல் மற்றும் அளத்தல் கருவிகளுக்கு சட்டபூர்வ முத்திரை இடும் பணிகள் ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலகப் பிரிவில் வர்த்தக நிலையங்கள், தொழிலகங்கள், சிறிய நடுத்தர மற்றும் பெரிய கடைகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் நிறுத்தல் மற்றும் அளத்தல் கருவிகளுக்கு சட்டபூர்வ முத்திரை இடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்கள மாவட்டப் பணிப்பாளர் ஏ.எல். நௌஷாத் தெரிவித்தார்.

இப்பிரதேச செயலகப் பிரிவில் சுமார் 500 இற்கு மேற்பட்ட வர்த்தக நிலையங்கள், தொழிலகங்கள், சிறிய நடுத்த மற்றும் பெரிய கடைகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில் அங்கு பயன்படுத்தப்படும் நிறுத்தல் மற்றும் அளத்தல் கருவிகளுக்கு புதன்கிழமை 14.02.2018 ஆரம்பிக்கப்பட்டுள்ள சட்டபூர்வ முத்திரை இடும் பணிகள் இம்மாதம் 27ஆம் திகதிவரை இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தில் வார நாட்களில் அலுவலக நேரங்களில் குறிப்பிட்ட காலப் பகுதியில் இந்தப் பணிகள் தினந்தோறும் இடம்பெறும்.
இக்காலப் பகுதியில் தம்வசமுள்ள நிறுத்தல் மற்றும் அளத்தல் கருவிகளுக்கு சட்டபூர்வ முத்திரை இட்டுக் கொள்வதோடு சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுமாறு வர்த்தகர்களும் தொழிலதிபர்களும் சில்லறை மற்றும் மொத்த விற்பனை வியாபாரிகளும் அறிவுறுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் கிரான் செங்கலடி மட்டக்களப்பு நகரம் கல்லாறு ரிதிதென்ன வாகரை கொக்கட்டிச்சோலை ஆகிய பிரதேசங்களிலுள்ள வர்த்தக நிலையங்களின் நிறுத்தல் மற்றும் அளத்தல் கருவிகளுக்கு முத்திரையிட்டதன் ஊடாக கடந்த ஆண்டின் ஜுலை மாதம் வரையான காலப்பகுதியில் சுமார் 51 இலட்சம் ரூபா வருமானமாக கிடைத்துள்ளதென மட்டக்களப்பு மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்கள மாவட்டப் பணிப்பாளர் ஏ.எல். நௌஷாத் மேலும் தெரிவித்தார்.