மட்டக்களப்பு கல்வி வலயத்தில் அர்ப்பணிப்பு சற்றுப்போதாது – மாகாண கல்விப்பணிப்பாளர் எஸ்.மனோகரன்

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் அர்ப்பணிப்பு சற்றுப்போதாது – மாகாண கல்விப்பணிப்பாளர் எஸ்.மனோகரன்

மட்டக்களப்பு கல்வி வலயக்கல்வி அலுவலகத்தின் வருடாந்த சாதனையாளர் பாராட்டுவிழா கடந்த செவ்வாய்க்கிழமை (23) பிற்பகல் 2.30 மணியளவில் மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கணபதிப்பிள்ளை-பாஸ்கரன் தலைமையில் புனித சிசிலியா பெண்கள் பாடசாலையில் இடம்பெற்ற போது விஷேட அதிதியாக கலந்து உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.முத்துபண்டா, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரன் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

அவர் தொடர்ந்து பேசுகையில்:-

அர்ப்பணிப்பு மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு மிகவும் முக்கியமானதாகும்.தனிப்பட்ட நோக்கம் தேவையில்லை. ஒரு பொதுவான நோக்குடன், தூரநோக்குடைய சிந்தனையின் மூலம் கவனமெடுத்து செயற்பட வேண்டும். மட்டக்களப்பு கல்வி வலயத்தை உயர்த்துவதில் அர்ப்பணிப்பு தேவையாகவுள்ளது. உச்சநிலைக்கு கொண்டு வருவதற்கு அர்ப்பணிப்புடன், ஒரு குழுவாக வேலை செய்வதற்குரிய அதிக தேவையிருக்கின்றது. கூட்டுப்பொறுப்பு, வகைகூறுதல் இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும். இவற்றை முறையாக கவனமெடுப்பதில் மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர், பிரதிக்கல்வி பணிப்பாளர்கள், உதவிக்கல்வி பணிப்பாளர்கள், கோட்டக்கல்வி பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் கவனம் எடுப்பதில் அக்கறை காட்டவேண்டும். நான் ஏசுவதற்காக வரவில்லை. இது என்னுடைய ஆலோசனையும், வழிகாட்டல்களும் ஆகும்.

ஆசிரியர் ஆளணியானது மிகையான ஆளணியாக இருக்கின்றது.ஒருசில பாடங்களைத்தவிர (கணிதப்பாடம் தவிர) ஏனைய பாடங்களின் ஆசிரியர் ஆளணி போதியளவு உள்ளது. 2018 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் இடமாற்றத்தில் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு வெளி கல்வி வலயத்தில் இருந்து வருகைதரவுள்ளார்கள். 2019 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றம் தற்போது செய்து கொண்டு இருக்கின்றோம். இவ்வாறான இரண்டு விடயங்களும் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இவற்றை நடைமுறைப்படுத்தினால் மட்டக்களப்பு கல்வி வலயத்தின் ஆளணி மிகவும் அதிகரிக்கும். எனவே மட்டக்களப்பு கல்வி வலயத்தின் ஆசிரியர் ஆளணியை சமநிலைப்படுத்த வேண்டும்.

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் உள்வாரி மதிப்பீடு செய்யப்படவேண்டும். ஆசிரியர், அதிபரின் சுயமதிப்பீடு அவசியமாகவுள்ளது. பிரதிபலிப்பு, நாட்குறிப்பு முறையாக கவனம் செலுத்தி அவை பேணப்பட வேண்டும். இதன்மூலம் வருடாந்த இலக்குகளை திட்டமிட்டு அதன் அடைவுமட்டத்தை அதிகரிக்க வேண்டும். ஒவ்வொருவரையும் வழிகாட்டி ஊக்குவிக்கப்படவேண்டும்.

அண்மையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள சிறுவர்களுக்கான விளையாட்டுப்போட்டி நடாத்தியிருந்தோம். இப்போட்டியில் கிழக்குமாகாணத்தில் உள்ள 17கல்வி வலயங்களையும் சேர்ந்த தமிழ்மொழி, சிங்களமொழி மூலமான சிறார்கள் கலந்துகொண்டார்கள். பங்குபற்றிய வலயங்களில் கல்குடா கல்வி வலயம் 3ம் இடத்தை பெற்றது. சிறார்களுக்கு தூண்டல் செயற்பாடு, முயற்சி, பயிற்சி இல்லை.செயற்பட்டு மகிழ்வோம் எனும் செயற்பாட்டுக்கென்று ஒரு உத்தியோகஸ்தர் இருக்கின்றார். அவர் என்ன செய்கின்றார் என்று எனக்குத் தெரியாது.

கிழக்கு மாகாணத்தின் இன்றைய நிலையைப் பார்க்கும்போது வேலியைப் பயிர் மேயும் நிலை அதிகரித்து கொண்டு வருகின்றது. கடந்தவாரம் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள பாலமுனை பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் 11ம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்தியதான செய்தி வெளியாகியுள்ளது.

இவ்வாறான கசப்பான சம்பவங்கள் கிழக்கு மாகாணத்தில் 4 சம்பவங்கள் பதிவாகியுள்ளது. சம்மாந்துறை கல்வி வலயத்தில் மாணவர் துஸ்பிரயோகத்திற்கு ஆசிரியர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுதான் கிழக்கு மாகாணத்தின் இன்றைய நிலைப்பாடாகும்.

இன்று மாணவர்களின் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து கொண்டு வருகின்றது. மாணவர்களின் ஒழுக்கம் குறைந்து கொண்டு வருகின்றது.மாணவர்களின் மத்தியில் தொலைபேசி பாவனை அதிகரித்து கொண்டு வருகின்றது. இவற்றில் பெற்றோர்கள் கூடிய கவனம் எடுக்கவேண்டும்.

மாணவர்களாகிய உங்கள் பிள்ளைகள் படிக்கின்றார்களா என உன்னிப்பாக அவதானிக்கவேண்டும். மாணவர்கள் படிப்பதுபோல் நடிக்கின்றார்களா? அல்லது படிக்கின்றார்களா? பெற்றோர்கள் நீங்க கண்காணிக்க வேண்டும். இதன்மூலம் எமது எதிர்கால சமூகத்திற்கு நல்லவராக, பொருத்தமுடையவராக மாற்றுவதற்கு பெற்றோரும் மற்றோரும் மிகவும் கவனமெடுத்து, அவர்களை சரியான பாதையில் இலக்குகளையும், சவால்களையும் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்தும்,ஆலோசனை வழிகாட்டல்களை ஏற்படுத்தியும் நாளைய உலகிற்கு நல்ல தலைவர்களாக பொருத்தமாக்க முடியும் எனத் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]