மட்டக்களப்பு மாவட்டத்தில் 79 வேட்பு மனுக்கள் ஏற்பு, இரண்டு நிராகரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் 79 வேட்பு மனுக்கள் ஏற்பு, இரண்டு நிராகரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாவது தொகுதியான 8 உள்ளுராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்கோரலில் 81 வேட்புமனுக்கள் கிடைக்கப்பெற்று அவற்றில் 79 ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன், இரண்டு நிராகரிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான மாணிக்கம் உதயகுமார் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 2.20 மணியளவில் தெரிவித்தார்.

மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தல் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டமை குறித்து அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இவ் 8 சபைகளுக்குமென 84 கட்டுப்பணங்கள் கிடைக்கப்பெற்றிருந்த போதிலும் 81 வேட்பு மனுக்களே தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மாநகரசபை , காத்தான்குடி நகர சபை, கோரளைப்பற்று மேற்கு, கோரளைப்பற்று வடக்கு, மண்முனை தென் எருவில் பற்று, மண்முனை மேற்கு, மண்முனை தென்மேற்கு, போரதீவு பற்று ஆகிய பிரதேச சபைகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்றைய தினம் பகல் 12 மணியுடன் நிறைவடைந்தன.

இதன்படி 1.30 மணிவரையான ஆட்சேபணை தெரிவிக்கும் காலத்தினைத் தொடர்ந்து கட்சி களுக்கான கூட்டம நடைபெற்று அறிவிப்புக்கள்வழங்கப்பட்டன.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலனும் கலந்துகொண்டார்.

மட்டக்களப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி, தேசிய மக்கள் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், சிறிலங்கா சுதந்திரக்கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி, பொது ஜன பெரமுன, உள்ளிட்ட பல கட்சிகள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.

கட்டுப்பணம் செலுத்தப்பட்ட 84ல் 30 மனுக்கள் நேற்றைய தினம் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டிருந்தன. மிகுதியானவற்றில் 51 வேட்புமனுக்கள் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டன.

இதன்படி, மட்டக்களப்பு மாநகர சபைக்கு 12 கட்சிகளும் 5 சுயேட்சைக்குழுக்களுமாக கிடைக்கப்பெற்ற 17 வேட்பு மனுக்களில் அகில இலங்கை தமிழ் காங்கிரசினுடைய வேட்பு மனு, உள்ளடக்கப்பட வேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்த காரணத்தினால் நிராகரிக்கப்பட்டது.

காத்தான்குடி நகர சபைக்கு 8 கட்சிகளும், 3 சுயேட்சைக்குழுக்களும் தாக்கல் செய்திருந்த அனைத்து வேட்பு மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்காக 9 கட்சியும், ஒரு சுயேட்சைக் குழுவும் வேட்பு மனுத்தாக்கல் செய்யதிருந்தன. அவை அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

கோரளைப்பற்று வடக்கு பிரதேச சபைக்கு 9 கட்சிகளும் 2 சுயேட்சைக்குழுக்களுமாக 11 வேட்புமனுக்கள் கிடைக்கப்பெற்றன. அவற்றில் 10 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு தேசிய மக்கள் கட்சியினுடைய வேட்புமனு பத்திரத்தில் உள்ளடக்க வேண்டிய பெண்பிரதிநிதித்துவத்தின் அளவு குறைவாக இருந்தமையினால் நிராகரிக்கப்பட்டது.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கு 5 கட்சிகளும், ஒரு சுயேட்சைக்குழுவும் வேட்புமனுக்களைச் சமர்ப்பித்ததில் அவை அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

மண்முனை மேற்கு பிரதேச சபைக்கு 7 கட்சிகளும், 2 சுயேட்சைக்குழுக்களும் கிடைக்கப்பெற்ற வேட்புமனுக்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்கு 7கட்சிகளும் ஒரு சுயேட்சைக்குழுவும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன. அவை அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

போரதீவு பற்று பிரதேச சபைக்கு 7 கட்சிகளும் 2 சுயேட்சைக்குழுக்களுமாக 9 வேட்புமனுக்கள் கிடைக்கப்பெற்று அவை அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

அதனடிப்படையில் 81 வேட்புமனுக்களில் 79 ஏற்றுக் கொள்ளப்பட்டு 2 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்று மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]