மட்டக்களப்பில் 57.331 ஏக்கர் காணி படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது : யோகேஸ்வரன் எம்.பி

மட்டக்களப்பில் 57.331 ஏக்கர் காணி படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கிரான் பிரதேச மக்களுடனான சந்திப்பு நேற்று இவரதுஅலுவலகத்தில் நடைபெற்றது. இங்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

மட்டக்களப்பில் 57.331 ஏக்கர்

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

மட்டக்களப்பில் பாதுகாப்புத் தரப்பினரால் சுவீகரிக்கப்பட்ட 77 குடும்பங்களுக்குச் சொந்தமான 57.331 ஏக்கர் காணி இதுவரை விடுவிக்கப்படவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை, வாழைச்சேனை, கிரான், ஏறாவூர், ஆரையம்பதி, வவுணதீவு, போரதீவு, பட்டிப்பளை, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணி விடுவிக்கப்படவில்லை.

இரணுவத்தினரினால் 25.58 ஏக்கரும் கடற்படையினரினால் 2.546 ஏக்கரும் மற்றும் பொலிஸாரினால் 29.205 ஏக்கரும் என பொதுமக்களுக்குச் சொந்தமான காணியில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முறக்கொட்டாஞ்சேனையில் பாடசாலைக் கட்டடத்துடன் உள்ளடங்கியதாக 40 குடும்பங்களுக்குச் சொந்தமான 18 ஏக்கர் காணியில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த இராணுவ முகாம் அகற்றப்படுவது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்துள்ளோம். முகாமை அகற்றுவதில் பாதுகாப்புத் தரப்பினர் இழுத்தடிப்புச் செய்துவருகின்றனர்.

பாதுகாப்புத் தரப்பின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக அமைச்சில் எதிர்வரும் 24 ஆம் திகதி விசேட கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் அகற்றுவது தொடர்பாக அழுத்தங்களைக் கொடுக்கவுள்ளேன் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]