மட்டக்களப்பில் நில அபகரிப்பு – விநாயகமூர்த்தி முரளிதரன் ( karuna )

மட்டக்களப்பில் நில அபகரிப்புமதுரோயா திட்டம் என்னும் பெயரில், மட்டக்களப்பில் பாரிய நில அபகரிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன என, மீள்குடியேற்ற முன்னாள் பிரதியமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன்( karuna ) தெரிவித்தார்.

கல்லடியில் நேற்று (15) மாலை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவித்ததாவது,

“மதுரோயா திட்டம் என்பது, மகாவலித் திட்டத்தின் கீழ் நீண்டகாலமாக உள்ளடக்கப்பட்டுள்ளது. மகாவலித் திட்டத்தின் கீழ், ஏற்கெனவே இடதுகரை வாய்க்கால், வலதுகரை வாய்க்கால் என, இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

“இடதுகரை வாய்க்கால் என்பது, ஏற்கெனவே புனரமைக்கப்பட்டு, அரலகன்வில போன்ற பொலன்னறுவை மாவட்டத்தின் அரைவாசிக்கும் மேற்பட்ட பகுதிகள் உள்ளடக்கப்பட்டு, அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தது.

“வலதுகரை வாய்க்கால் என்பது தொப்பிகல பிரதேசமாகும். மகாவலி அபிவிருத்தி சபை, எதுவிதத் தகவல்களையும் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வழங்காமல், ஆய்வுகளை மேற்கொண்டு, தற்பொழுது அதை அமுலாக்குவதற்கான இறுதிக் கட்டத்துக்கு வந்துள்ளது. கிரான் பிரதேச சபைக்குட்பட்ட நான்கில் மூன்று பங்கு நிலப்பரப்பு உள்வாங்கப்படவிருப்பதால், இது பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தவுள்ளது.

“அத்துடன், செங்கலடி, ஈரளக்குள பிரதேசங்களும் இந்த திட்டத்துக்குள் உள்வாங்கப்படவிருக்கின்றன. மொத்தமாக 15,500 ஹெக்டெயர் நிலப்பரப்பு, இந்தத் திட்டத்தில் உள்வாங்கப்படவிருக்கின்றது.

“மதுரோயா திட்டத்தில் நீரின் கொள்ளளவு 597 எம்.சி.எம் ஆகும். வாகனேரி குளத்தில் நீர்த்தட்டுப்பாடு ஏற்படும் சமயத்தில் நீரைக் கேட்டாலும், பற்றாக்குறையைக் காரணம் காட்டி நீரை அவர்கள் வழங்க மாட்டார்கள்.இவ்வாறு நீர்ப்பற்றாக்குறை இருக்கும் தருணத்தில் இத்திட்டத்தை எவ்வாறு அமுல்படுத்துவார்கள் என்பது புரியவில்லை.

“ஆகவே, முற்றுமுழுதாக நில அபகரிப்புக்காக அமுல்படுத்தப்படுகின்ற திட்டமாகவே இதனை நாங்கள் பார்க்கின்றோம்.

“இது தொடர்பில் மட்டக்களப்பில் உள்ள புத்திஜீவிகளுக்குத் தெளிவை ஏற்படுத்தியுள்ளோம். மட்டக்களப்பு மாவட்ட மக்கள் விழிப்படையவேண்டும். இதற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்காவிட்டால், நிலங்கள் பறிபோவதை யாரும் தடுக்கமுடியாது” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]