மட்டக்களப்பில் சிறுவர்களின் சவால்களை கையாள விசேட அரங்கம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர் சார்ந்த சவால்களை தொடர்ச்சியாகக் கையாள்வதற்கு ஏற்ற வகையில் அரங்கம் ஒன்றை அமைத்து செயற்பாட்டாளர்களை இணைக்கும் முயற்சி இடம்பெற்று வருவதாக மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் மஹ்புன் நிஸா றியாஸ் தெரிவித்தார்.

இதன் முதற்கட்டமாக செவ்வாய்க்கிழமை 12.06.2018 காலை 10 மணிக்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னாலுள்ள மாவட்ட சிறுவர் அபிவிருத்தி உப குழு அலுவலகத்தில் இடம்பெறும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இடம்பெற ஏற்பாடாகியுள்ள நிகழ்வுகள் குறித்து மேலும் தெரிவித்த அவர்,

சிறுவர்களின் விவகாரங்களைக் கிரமமான முறையில் கையாள்வதற்கு ஏற்ற வகையில் சிறுவர் நலன் சார்ந்த செயற்பாடுகளோடு சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் ஒருங்கிணைத்து அரங்கம் ஒன்றை உருவாக்கும் முயற்சியே இதுவாகும்.

இந்த அரங்கத்தின் ஒருங்கிணைந்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் உட்பட துறைசார்ந்த வைத்தியர்கள், மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அலுவலர்கள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள், உளநல உதவியாளர்கள், கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் சிறுவர் நலன்சார்ந்த செயற்பாட்டு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

மாவட்ட சிறுவர் அபிவிருத்தி உப குழுவை மீளமைத்தல், மாவட்ட சிறுவர் அபிவிருத்தி உப குழுக் காரியாலயத்தில் இடம்பெறுகின்ற சம்பவ மாநாடுகளை வினைத்திறனாக மீள இயக்குதல், பாடசாலை மட்டத்தில் சிறுவர் சார்ந்து இடம்பெறுகின்ற சவால்களுக்கு எவ்வாறு முகம் கொடுத்து ஆக்கபூர்வமாகக் கையாளுதல், எதிர்காலத்தில் கல்வி அரங்கம் ஒன்றை உருவாக்குதல், கல்விச் செயற்பாட்டாளார்களின் ஆதரவை அதிகரித்து உள்வாங்குதல், சிறுவர் சார்ந்த சவால்களை முறியடிக்க எவ்வாறு, எதிர்காலத்தில் செயற்படலாம் என்ற ஆலோசனைகளைப் பெறல், சிறுவர்கள் சார்ந்து பாடசாலைகளில் இடம்பெறும் சம்பவங்கள், கல்விப் பிரிவில் எடுத்து வரும் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் பற்றி ஆராய்தல் உள்ளிட்ட பல விடயங்கள் இந்த கலந்துரையாடல் அரங்கத்தில் இடம்பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சிறுவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய விழிப்புணர்வுகள் அதிகாரிகள், துறைசார்ந்தவர்கள், கிராம மக்கள், பெற்றோர், சிறுவர் சிறுமியர், பாடசாலை இடைவிலகியோர், வளர்ந்தோர் மற்றும் இளவயதினர் என்று சமுதாயத்தின் எல்லா மட்டங்களிலுமுள்ளோருக்கும் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]