முகப்பு News Local News மட்டக்களப்பில் ஏட்டிக்குப் போட்டியான ஹர்த்தாலுக்கு அழைப்பு தமிழ் உணர்வாளர்கள் மற்றும் நீதி கோரும் சிவில் அமைப்பு...

மட்டக்களப்பில் ஏட்டிக்குப் போட்டியான ஹர்த்தாலுக்கு அழைப்பு தமிழ் உணர்வாளர்கள் மற்றும் நீதி கோரும் சிவில் அமைப்பு என்பன களத்தில்

மட்டக்களப்பில் ஏட்டிக்குப் போட்டியான ஹர்த்தாலுக்கு அழைப்பு தமிழ் உணர்வாளர்கள் மற்றும் நீதி கோரும் சிவில் அமைப்பு என்பன களத்தில்

மட்டக்களப்பு – பதுளை வீதி பெரியபுல்லுமலையில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிப்புத் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் உணர்வாளர்கள் என்ற பெயரில் ஏற்கெனவே வெள்ளிக்கிழமை ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நிர்வாகப் பயங்கரவாதம், இனவாத வன்மக் கருத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் ஹர்த்தால் அனுஷ்டிக்க அழைப்பு விடுப்பதாக நீதி கோரும் மக்கள் குரல், முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் ஒன்றியம் ஆகியன அறிவித்துள்ளன.

ஏட்டிக்குப் போட்டியான இந்த ஹர்த்தாலுக்குரிய தினமாக இந்த இரு தரப்புக்களும் வெள்ளிக்கிழமையைத் (07.09.2018) தேர்ந்தெடுத்துள்ளன.

வழமையாக மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம் நகரப் பிரதேசங்கள் வெள்ளிக்கிழமை ஜும்மாத் தொழுகைக்காக மூடப்படுவதோடு வெறிச்சோடியும் காணப்படும்.

அந்தத் தினத்தையே இருசாராரும் தமது ஹர்த்தால் வெற்றியடைந்தமைக்கான உத்தியாகப் பாவிக்க முனைந்துள்ளது போலத் தோன்றுவதாக நோக்காளர்கள் தெரிவிக்கின்றனர்.

சமூகங்களுக்கிடையிலான வெப்புணர்வுகளைத் தூண்டிவிடும் வகையில் இந்த ஏட்டிக்குப் போட்டியான ஹர்த்தால் அழைப்பு அமைந்து விடுமோ என தாங்கள் அஞ்சுவதாகவும் சமூக நல நோக்காளர்கள் தெரிவிக்கின்றனர்.

முஸ்லிம்கள் சார்பில் நீதி கோரும் சிவில் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்வதற்கு, குடியேறுவதற்கு, தொழில் செய்வதற்கு, சட்ட ரீதியாக தமது பூர்வீக நிலங்களை பெற்றுக்கொள்வதற்கு விதிக்கப்படும் தடைகள் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பில் அண்மைக்காலமாக திட்டமிட்ட ரீதியில் மேற்கொள்ளப்படும் ஆயுத குற்றச்சாட்டு உள்ளிட்ட இனவாத வன்மம் பிரச்சாரங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கரி நாள் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

ஆயுத ரீதியான பயங்கரவாதம் தோல்வியுற்றுள்ள நிலையில் முஸ்லிம்களுக்கு எதிராக பொருளாதார மற்றும் நிர்வாக பயங்கரவாதம் ஆரம்பித்து வைத்துள்ளதாகவும், தமிழ் அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சிகள் தமது அரசியல் நோக்கங்களுக்காக இவ்வாறான முஸ்லிம் விரோத செயற்பாடுகளை கட்டவிழ்த்து விட்டுள்ளதாகவும் இதனால் அப்பாவி தமிழ் – முஸ்லிம் மக்களிடையே பகைமை வளர்ந்து வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்து ஒற்றுமையாக வாழ்வதற்கான சூழலை தாமாகவே ஏற்படுத்திக் கொள்வதற்கும் இனவாதத்தை விதைக்கும் அரசியல் சக்திகளுக்கு எதிராக தமது எதிர்ப்பினை காட்டுவதற்கும் மேற்படி ஹர்த்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com