மட்டக்களப்பில் இனக்கலவரத்தைத் தூண்ட இடமளிக்க முடியாது பிரஜா பொலிஸ் குழுச் செயலாளர் கே. யோகவேள்!!

மட்டக்களப்பில் எவரும் எந்த வடிவத்திலும் இனக்கலவரத்தை தூண்ட இடமளிக்க முடியாது என மட்டக்களப்பு பிரஜா பொலிஸ் குழுச் செயலாளர் கே. யோகவேள் தெரிவித்தார்.

மட்டக்களப்பின் எல்லை மாவட்டமான அம்பாறையிலும் அதனைத் தொடர்ந்து கண்டியிலும் சமீபத்திய கலவரங்கள் ஏற்படுத்திய பாதிப்புக்களையிட்டு அவதானம் செலுத்தும் விதமாக மட்டக்களப்பில் பொலிஸ் உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதன் பின்னர் அவர் வியாழக்கிழமை 15.03.2018 கருத்து வெளியிட்டார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், நாட்டின் பிரஜைகள் எவரும் எந்த வகையிலும் இனத்துவேஷத்தை ஒரு போதும் தங்களது கருவியாகப் பாவித்து வெற்றி காண முடியாது என்பதை நடந்து முடிந்த அழிவுகள் நிரூபித்துள்ளன.

இதனை எச்சரிக்கையுடனான கற்றுக் கொண்ட ஒரு பாடமாக எடுத்து இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை நோக்கிப் பயணிப்பதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அந்த வகையில், மூவினங்களும் தயக்கமின்றி தமது கல்வி, வியாபாரம், உத்தியோகம், வாழ்வாதாரம் உள்ளிட்ட இன்னபிற அலுவல்களில் ஈடுபடும் முன்மாதிரி நகரமாக மட்டக்களப்பை பேணிப்பாதுகாப்பதற்கு மட்டக்களப்பு பிரஜா பொலிஸ் குழு தீர்மானித்துள்ளது.

ஆகவே, இலங்கையின் பல்லினங்கள் மட்டுமல்ல வெளிநாட்டாரும் வந்து புழங்கும் இந்த மட்டக்களப்பு நகரை பதற்றம் நிறைந்த நகராக மாற்றுவதற்கு எவரும் முயற்சிக்கக் கூடாது.

இந்த நகரில் இனக்கலவரத்தை எந்த வடிவத்தில் தூண்ட முயற்சிப்பவர்களுக்கும் அதற்கு எந்த வகையிலோ ஆதரவளிப்பவர்களுக்கும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாங்கள் பொலிஸ் உயர் மட்டத்தைக் கோரியிருக்கின்றோம்.

இந்த விடயத்தில் மட்டக்களப்பில் செயற்படும் பிரஜா பொலிஸ் குழு மிகவும் விழிப்பாக இருந்து செயலாற்ற வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு பிரச்சினையையும் இல்லாத ஒரு பகுதியாக மட்டக்களப்பை மாற்றியமைக்க வேண்டும் என்றும் நாம் திடசங்கற்பம் கொண்டுள்ளோம்.

மட்டக்களப்பில் எந்தவொரு இன முறுகலும் ஏற்படாவண்ணம் பாதுகாப்பதில் நாங்கள் என்றும் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

பிரச்சினைப்படுபவர்கள், தூண்டுபவர்கள், ஆதரவளிப்பவர்கள் சமூகத்தில் இனங்காணப்பட வேண்டும். இதற்கு பொதுமக்கள் பூரண ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்க வேண்டும்.

இந்த விடயத்தில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் அத்தியட்சகர் அக்கறையாக உள்ளார்.

இனங்களின் இணைப்பினாலேயே அபிருத்தியையும் அமைதியையும் கொண்டு வர முடியுமேயன்றி அதற்குப் பதிலாக இனத்துவேஷத்தைத் தூண்டி அபிவிருத்தியையும் அமைதியையும் கொண்டு வர முடியாது, அழிவுகளே மிஞ்சும். இந்த யதார்த்தத்தை குழப்பவாதிகள் நின்று நிதானித்து உற்று நோக்கிப் பார்க்க வேண்டும்” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]