மட்டக்களப்பில் இடம்பெற்ற கோரவிபத்தில் இளைஞன் ஒருவர் பலி!!

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காட்டில் இடம்பெற்ற பாரிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் பொலநறுவையில் இருந்து கோழி ஏற்றிவந்த டிப்பர் ரக வாகனமும், சிற்றுந்து ஒன்றும் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்தில் சிற்றுந்து சாரதி, ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும் டிப்பரில் பயணம் செய்த மூவரும் சிற்றுந்தில் பயணம் செய்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரியவருகிறது.

இதில் டிப்பரின் சாரதி உட்பட இருவர் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் மூவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்த விபத்தில் ஓந்தாச்சிமடம் 36 வீட்டுத்திட்டத்தினை சேர்ந்த இராஜரெட்னம் தினேஸ்காந்த் என்ற 27 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.