மச்சினி மீது காதல் கொண்டதால் மாப்பிள்ளை வீட்டில் மண்ணெண்னை குண்டு வீசிய பாத்திமாவின் கணவர்

சென்னையில் மனைவியின் சகோதரி மீது கொண்ட காதலால், திருமணத்தை நிறுத்த மாப்பிள்ளை வீட்டில் மண்ணெண்னை குண்டு வீசியவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அண்ணாசாலை லூதாரம் தெருவை சேர்ந்தவர் அப்துல்காதர். இவருக்கும் தாஸீன் பாத்திமா என்பவருக்கும் ஜூலை 1ந்தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் 29 ந்தேதி இரவு அப்துல்காதர் வீட்டில் மர்ம நபர் ஒருவர் மண்ணென்னை குண்டு வீசிச்சென்றார். இதில் வீட்டின் முன்பக்க திரை சீலை எரிந்து சாம்பலானது. உடனடியாக வீட்டில் உள்ளவர்கள் விழித்துக்கொண்டு தண்ணீரை ஊற்றியதால் பெரும் தீவிபத்து தடுக்கப்பட்டது.

வீட்டில் இருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்த போது மண்ணெண்னை குண்டு வீசியவர் மணமகள் தாஸீன் பாத்திமாவின் மூத்த சகோதரி சித்தோஸ் பாத்திமாவின் கணவர் முபசீர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவனை பிடித்து விசாரித்த போது தனக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பில்லை என்று மறுத்து வந்தான்.

இதையடுத்து காவல்துறையினர் முபசீரை முறையான கவனிப்புடன் விசாரித்த போது மண்ணெண்னை குண்டு வீசியதற்கான காரணம் வெளிச்சத்துக்கு வந்தது.முபசீர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சித்தோஸ் பாத்திமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பதாக கூறப்படுகிறது.

வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்து கொடுத்தாலும் மனைவி, மாமனார் மற்றும் மாமியார் அவருக்கு கடுமையான தொல்லை கொடுத்து வந்ததாகவும், தாஸீன் பாத்திமா மட்டுமே ஆறுதலாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.இந்த நிலையில் தாஸீன் பாத்திமா மீது காதல் கொண்ட முபசீர் அதனை வெளிப்படுத்த சமயம் பார்த்து இருந்துள்ளார்.

முபசீரின் நடவடிக்கைகள் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியவந்ததால் உடனடியாக தாஸீன் பாத்திமாவுக்கு, வெளியிடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணத்துக்கு முடிவு செய்துள்ளனர்.இதனால் ஆத்திரம் அடைந்த முபசீர், மாப்பிள்ளை வீட்டில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் திருமணம் நிறுத்தப்படும் என்ற கெட்ட எண்ணத்தில், மாப்பிள்ளை அப்துல்காதர் வீட்டிற்கு தீவைப்பதற்காக மண்ணெண்னை குண்டு வீசியதாக தெரிவித்தான். மேலும் தாஸீன் பாத்திமாவுக்கும் இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும் அவன் கூறினான்.

விசாரணையில் பெற்றோர் விருப்பப்படியே திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும், முபசீரிடம் தான் காட்டியது அனுதாபம் மட்டுமே என்றும் தாஸீன் பாத்திமா தெரிவித்தார். இதையடுத்து மண்ணெண்னை குண்டு வீசிய வழக்கில் முபசீரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அக்காள் கணவர் கஷ்டபடுகிறாரே என்று ஆறுதலாக நடந்து கொண்ட தாஸீன் பாத்திமாவின் இரக்க குணத்தை புரிந்து கொள்ளாமல், அவரை 2 வது மனைவியாக்க திட்டமிட்ட முபசீர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்..

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]