மக்கள் செல்வாக்கை இழந்துள்ளதால் ஆயுத பலத்தைக்காட்டி ஆட்சி முனைகிறது அரசு

மக்கள் செல்வாக்கை இழந்துள்ளதால் ஆயுத பலத்தைக்காட்டி ஆட்சியை முன்னெடுக்கவேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது என்று எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அத்தியாவசிய பொதுச்சேவைகள் சட்டத்தின்கீழ், எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம் ஆகியவற்றை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் பிரகடனம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

தொழிற்சங்கப் போராட்டத்தை முடக்குவதற்காக அந்தச் சட்டத்தின்கீழ் பிரகடனமொன்றை அரசு   வெளியிடப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகளுக்கு எரிபொருள் விநியோகிப்பதற்கு பெற்றோலிய தொழிற்சங்கத்தினர் தயாராகவே இருந்தனர்.

எனினும், தொழிற்சங்க நடவடிக்கையை முடக்குவதற்காகவும், இராணுவத்தை களமிறக்குவதற்காகவுமே இந்த அத்தியாவசிய மக்கள் பாதுகாப்புச் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தொழிற்சங்கத் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு பொலிஸாரால் தாக்கப்பட்டுள்ளனர். வெல்லம்பிட்டிய பொலிஸாரே இந்த விடயத்தை கையாண்டிருக்கவேண்டும். எனினும், வெலிக்கடை பொலிஸுக்கு  கொண்டுசெல்லப்பட்டனர்.

தொழிற்சங்கத் தலைவர்கள் மீது குண்டர்குழுவை ஏவிவிட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கீழ்தரமான முறையில் அவர்கள் நடத்தப்பட்டுள்ளனர். குறித்த பிரடகனத்தை அரசு  வாபஸ்பெற வேண்டும் என்பதுடன், தொழிற்சங்கத்துடன் பேச்சுகளை  நடத்திய பிரச்சினைகளுக்குத் தீர்வைகாண முன்வரவேண்டும்.
ஜனநாயகத்தைப் பற்றி பேசி ஆட்சிக்கு வந்த அரசின் உண்மை முகம் அம்பலமாகியுள்ளது. நல்லாட்சி நிர்வாணமாகியுள்ளது. மக்கள் செல்வாக்கை அரசு இழந்துவிட்டது. ஆயுத பலத்தால் ஆட்சி செய்யவேண்டிய நிலையே இருக்கின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]