மக்கள் கோரிக்கைக்கு மதிப்பளித்து தண்ணீர் தொழிற்சாலை நடவடிக்கைகளை நிரந்தரமாக நிறுத்த நடவடிக்கை எடுக்க ஜனாதிபதியிடம் வேண்டுகோள்

மக்கள் கோரிக்கைக்கு மதிப்பளித்து தண்ணீர் தொழிற்சாலை நடவடிக்கைகளை நிரந்தரமாக நிறுத்த நடவடிக்கை எடுக்க ஜனாதிபதியிடம் வேண்டுகோள்

மக்கள் கோரிக்கைக்கு மதிப்பளித்து மட்டக்களப்பு பெரிய புல்லுமலையில் தண்ணீர் தொழிற்சாலை நடவடிக்கைகளை நிரந்தரமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கும்படி தங்களை கோருகின்றோம் என தமிழ் உணர்வாளர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மட்டக்களப்பு பெரிய புல்லுமலையில் தண்ணீர் தொழிற்சாலை தடைசெய்யுமாறு கோரி தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் புதன்கிழமை (12) ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது – “மட்டக்களப்பு மாவட்டத்தில் புல்லுமலை எனும் கிராமத்தில் அமைக்கப்பட்டு வரும் தண்ணீர் தொழிற்சாலைக்கு எதிராக செப்ரம்பர் 7ம் திகதி மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் ஸ்தம்பிதமானது. கடைகள், பாடசாலைகள், அரச திணைக்களங்கள், போக்குவரத்து என எதுவும் இன்றி முழு மாவட்டமும் ஸ்தம்பிதமானது. தண்ணீர் தொழிற்சாலையை மக்கள் ஏற்கவில்லை என்பதற்கு இதனை விட எந்த சான்றும் தேவையில்லை.

இதற்கு முன்பும் மக்கள் போராட்டங்கள் நடாத்தியும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றியும் தங்களுக்கு நேரடியாக மகஜர் வழங்கியும் எந்த விதமான அசைவினையும் காண முடியவில்லை.

இந்த தண்ணீர் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டால் எங்களது பௌதீக வளங்கள் பாதிக்கப்படும். விவசாயம் தொட்டு கால்நடைகள் வரை பாதிக்கப்படும். எமது விவசாய நிலங்கள் உவர் நிலங்களாக மாறி விடும் என்பது பற்றி பௌதீக ஆய்வாளர்கள் கூறும் எதிர்வு கூறல்கள் எம்மிடம் உள்ளது.

அத்துடன் இந்த தண்ணீர் தொழிற்சாலைக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினரும் காத்தான்குடி நகர சபை தலைவருமாகிய அஸ்வர் என்பவர் உரிமை கோரினாலும் இதன் பின்புலம் ஹிஸ்புல்லாற் என்பவர் என்பது மக்கள் எல்லோரினதும் கருத்தாகும்.

தண்ணீர் தொழிற்சாலைக்கு சார்பாக இத்தனை போராட்டங்கள் நடாத்தியும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது தங்களது ஆதரவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அதிகாரமும் காரணமாக இருக்கலாம் என்றும் எமது மக்கள் கருதுகின்றனர்.

எனவே இந்த தண்ணீர் தொழிற்சாலைக்கு எதிராக முழு மாவட்ட மக்களும் தங்களது கருத்தை ஹர்த்தால் மூலம் பதிவு செய்துள்ளனர். மக்கள் கோரிக்கைக்கு மதிப்பளித்து புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலை நடவடிக்கைகளை நிரந்தரமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கும் படி தங்களை கோருகின்றோம்;.

மக்களின் வேண்டுகோளை மதிப்பளிக்காது இருப்பின் மக்கள் போராட்டம் கொழும்பை நோக்கி விரிவடையும் என்று மரியாதையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

தண்ணீர் தொழிற்சாலை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]