மக்களின் உணர்வுகளை மதிக்கின்றோம், மனப்பூர்வமான ஆதரவை அளிக்கின்றோம் – ஞா.ஸ்ரீநேசன்

மக்களின் உணர்வுகளை மதிக்கின்றோம், மனப்பூர்வமான ஆதரவை அளிக்கின்றோம்- பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்

7ந் திகதிய எதிர்ப்பினை தனிமனித, தனி இனத்துவ எதிர்ப்பாக எவரும் சித்திரிக்க வேண்டாம். சுயாதீனமானதும், சுதந்திரமானதும், அடிப்படைத் தேவையுடனும் மக்கள் காட்டுகின்ற நியாயமான எதிர்ப்பினை யாரும் விளம்பர அரசியலுக்கோ, சுயநல அரசியலுக்கோ பயன்படுத்தாமல் பக்குவமாக நடந்து கொள்வோம். மக்களின் உணர்வுகளை மதிக்கின்றோம், மனப்பூர்வமான ஆதரவை அளிக்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

எதிர்வரும் 07ம் திகதி புல்லுமலை தண்ணீர்த் தொழிற்சாலைக்கு எதிராக தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு போராட்டம் தொடர்பில் புதன்கிழமை (05) மாலை கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு புல்லுமலையில் அமைக்கப்படுகின்ற தண்ணீர்த் தொழிற்சாலைக்கு எதிராக மக்கள் காட்டுகின்ற நியாயமான எதிர்ப்பினை, மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் மனப்பூர்வமாக ஆதரிக்கின்றோம். உணர்வுகளின் பிரதிபலிப்பாக மக்கள் காட்டுகின்ற சாத்வீகமான செப்டெம்பர் ஏழாந்திகதிய எதிர்ப்பினையும் ஆதரிக்கின்றோம்.

இந்த எதிர்ப்பானது தனிப்பட்ட விரோத, குரோதத்திற்கு அப்பாற்பட்டதும், அடிப்படைத் தேவையான குடிநீரின் இருப்பியலுடனும் சம்பந்தப்பட்டதாகும். புல்லுமலையை அண்டிய கிராமங்களான உறுகாமம், மங்களகம, கித்துள் போன்ற கிராமங்களில் தமிழர், சிங்களவர், முஸ்லீம் என மூவின மக்களும் சகோதர்களாக வாழ்ந்து வருகின்றார்கள். இந்நிலையில் ஒரு கிராமத்தில் ஏற்படக் கூடிய நிலவரட்சி ஏனைய கிராமங்களிலுமுள்ள மூவின மக்களையும் நீண்ட காலப்போக்கில் பாதிக்கவும் கூடும்.

நிலக்கீழ் நீரினைப் பாதுகாக்க வேண்டியது எதிர்கால சந்ததியின் தேவையோடு தெடர்புபட்டது என்பதைக் காய்தல், உவத்தல் இன்றி சிந்திக்க வேண்டியுள்ளது. எனவே, பொறுப்புமிக்க தலைவர்கள் என்ற வகையில் இதனைப் புரிந்து கொள்ளவோமாக. இக்கால, எதிர்காலச் சந்ததியைப் பாதிக்கக் கூடிய செயலை எவராக இருந்தாலும் செய்யாதிருப்போம்.

ஏழாந்திகதிய எதிர்ப்பினை தனிமனித, தனி இனத்துவ எதிர்ப்பாக எவரும் சித்திரிக்க வேண்டாம் என வினயமாகக் கேட்டுக் கொள்கின்றோம். சுயாதீனமானதும், சுதந்திரமானதும், அடிப்படைத் தேவையுடனும் கூடிய இவ்வெதிர்ப்பை யாரும் விளம்பர அரசியலுக்கோ, சுயநல அரசியலுக்கோ பயன்படுத்தாமல் பக்குவமாக நடந்து கொள்வோம். இன்றைய தேவை ஆக்குரோசமான உணர்;ச்சிக் கொப்பளிப்புகள் அல்ல. அறிவுபூர்வமான பக்குவமான நடத்தைகளேயாகும்.

நிலையான அபிவிருத்திகளையும், நீடித்த தொழில் வாய்ப்புகளையும் ஆதரிப்போம். அப்படியான கருமங்களை ஆற்றுவோரை வாழ்த்தி வரவேற்போம். பௌதீகச் சூழல், உயிரியற்சூழல், பண்பாட்டுச் சூழலைப் பாதிக்கும் செயற்பாடுகளை எதிர்ப்போம். அந்த எதிர்ப்பினைப் பிற்போக்குவாதரீதியான இன, மத, மொழி, குல எதிர்ப்பாகக் கொள்ளாதிருப்போம்.

அமைதியாகவும், அடக்கமாகவும், நிதானமாகவும், நியாயமாகவும், அரசியலுக்கு அப்பால் மக்கள் சுயாதீனமாகக் காட்டுகின்ற பொறுப்புடன் கூடிய எதிர்ப்பினை எவரும் அரசியற் தேவைக்காகப் பயன்படுத்தாமல் இருப்பதே புத்திசாலித்தனமாகும் என்று தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]