மகிந்த ராஜபக்சவின் அடுத்த இலக்கு இதுதானாம்!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமது அடுத்த இலக்கு எதுவென்பது பற்றி தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஒத்தி வைக்கப்பட்டுள்ள மாகாணசபைத் தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றோம்.

2017ம் ஆண்டில் பதவிக் காலம் பூர்த்தியான வடமத்திய, சபரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தலை அரசாங்கம் ஒத்தி வைத்துள்ளது. இவ்வாறு ஒத்தி வைத்து ஆறு மாதங்கள் கடந்துள்ளன.

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைகளின் பதவிக் காலமும் இன்னும் சில மாதங்களில் பூர்த்தியாகவுள்ளன.

இந்த தேர்தல்களை ஒத்தி வைக்காது மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைகளை குழி தோண்டி புதைப்பதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

அரசாங்கம் நாட்டின் பிரச்சினைகளை மக்கள் மறக்க வேண்டுமென்ற வகையில் செயற்பட்டாலும், மக்களிடமிருந்து அவற்றை மூடி மறைத்துவிட முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.