போலி முகங்களுடன் இருக்கின்ற அரசியல் தலைமைகளுக்கு சரியான பாடம் புகட்டும் தேர்தலாக உள்ளுராட்சி மன்றத் தேர்தல்

போலி முகங்களுடன் இருக்கின்ற அரசியல் தலைமைகளுக்கு சரியான பாடம் புகட்டும் தேர்தலாக உள்ளுராட்சி மன்றத் தேர்தல்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி

போலி முகங்களுடன் இருக்கின்ற அரசியல் தலைமைகளுக்கு சரியான பாடம் புகட்டும் தேர்தலாக நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் அமையும் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பி.பிரசாந்தன் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைக்கான வேட்பு மனு இன்று (12) செவ்வாய்க்கிழமை தாக்கல்செய்யபட்டது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பி. பிரசாந்தன், கட்சியின் பிரதித் தலைவர் க.யோகவேல் உட்பட கட்சி ஆதரவாளர்கள் சகிதம் சென்று தாக்கல் செய்தனர்.

மன தாக்கல் செய்யப்பட்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரசாந்தன் தெரிவித்ததாவது, கடந்த காலத்தில் மக்களின் ஆணையைப் பெற்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் நிருவாகத்தின் கீழ் இருந்த உள்ளுராட்சி மன்றங்கள் எவ்வாறு செயற்பட்டது என்பது கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் தெரியும்.

தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் மாகாணசழப சென்றவர்கள் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைக்கூட தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு நிதி, நிருவாக ரீதியாக மிகவும் மோசமான நிலைக்கு கிழக்கு மாகாண தமிழர்களை மாற்றியுள்ளார்கள்.

கௌரவ தலைவர் சி.சந்திரகாந்தனின் வழிகாட்டலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித்துவமாக இம்முறை போட்டியிடுகிறது. கிழக்கு மாகாணத்தின் இருப்பினைத் தக்கவைத்துக் கொள்ள தங்களது எல்லைப் பிரதேசங்களை நிதி நிருவாகங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமாகவிருந்தால் அனைத்து தமிழ் மக்களும் படகு சின்னத்துக்கு வாக்களித்து எமது கட்சிக்குப் பின்னால் அணி திரழவேண்டும் என்பது எல்லோருடைய தேவைப்பாடாகவும் உள்ளது.

தமிழ் மக்களது வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் சென்றவர்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி எவ்வித தீர்வும் பெற்றுக்கொடுக்காமல் நல்லாட்சி அரசில் இணைந்துகொண்டுள்ளார்கள்.

கிழக்கு மாகாணத்தில் இணக்க அரசியல் நடத்தியவர்கள் தமிழர்களின் இருப்புக்களை இல்லாமல் ஆக்கினார்களே தவிர எதனையும் செய்யவில்லை. இந்தநிலையில் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மக்களுக்கு எதனைச் செய்யப்போகின்றார்கள் என்ற கேள்விக்குறி மக்கள் மத்தியில் உள்ளது.

தங்களுக்குள்ளேயே நிருவாகத்தைப் பகிர்ந்துகொள்ள முடியாதவர்கள் எவ்வாறு கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழர்களுக்கான ஜனநாய உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கப் போகிறார்கள்.

போர்க்குற்ற விசாரணை சர்வதேச விசாரணை என்னு எல்லாம் கூறி தமிழ் மக்களுடைய வாக்குகளைப் பெற்றவர்கள் இன்று எதுவும் இல்லாமல் வெறுமனே கை உயர்த்துகின்ற சொல்வதற்கு ஆடுகின்ற பொம்மைகளாக இருக்கின்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு எவ்வாறு உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கப்போகிறது” என்றார்.