போர்க்காலத்தில் மீட்கப்பட்ட 37.7 கிலோ தங்கத்தை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க பாதுகாப்பு அமைச்சு அடுத்தவாரம் உயர்மட்ட பேச்சு

போர்க்காலத்தில் மீட்கப்பட்ட 37.7 கிலோ தங்கநகை பொருட்களை உரிமையாளர்களிடம் மீள கையளிக்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது.

விடுதலைப்புலிகள் வசமிருந்த மற்றும் யுத்த காலத்தின்போது இடம்பெயர்ந்தவர்களது வீடுகளிலிருந்து மீட்கப்பட்ட ஒரு பில்லியன் பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் பிற தங்கநகை பொருட்கள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழு மேற்படி பரிந்துரையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன் அடுத்தகட்ட நடவடிக்கை சம்பந்தமாக அனைத்துத் தரப்புடனும் அடுத்த வாரமளவில் கலந்துரையாடலொன்றை மேற்கொள்ளவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் உதவிச் செயலாளர் ஆர்.எம்.எஸ்.சரத்குமார தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவத்தால் வழங்கப்பட்ட 37.7 கிலோ கிராம் தங்க ஆபரணங்கள் தம்வசம் உள்ளதாக ஊடக நிறுவனமொன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக கோரியிருந்த கேள்விக்கு மத்திய வங்கி பதில் வழங்கியுள்ளது.

அத்துடன், 2010 செப்டெம்பர் 7ஆம் திகதிமுதல் 2012 ஜனவரி 26ஆம் திகதிவரையான காலப்பகுதியில் இராணுவத்தால் 28 சந்தர்ப்பங்களில் இந்தத் தங்க ஆபரணங்கள் பொதிசெய்யப்பட்டு மத்திய வங்கியில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆபரணப் பொதிகள் வழங்கப்படும் சந்தர்ப்பங்களில் அவற்றின் எடை மற்றும் பெறுமதி என்பன தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையால் இராணுவ அதிகாரி மற்றும் மத்திய வங்கி கணக்காய்வாளர் ஒருவர் முன்னிலையில் மதீப்பீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், அவற்றுக்கான பற்றுச்சீட்டு கடிதம் மூலம் இராணுவத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த வருடம் இராணுவத்தால் ஒப்படைக்கப்பட்ட 6003.132 கிராம் அளவிலான பொதி ஒன்று இதுவரை தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையால் மதிப்பீடு செய்யப்படவில்லை எனவும், அந்தப் பொதியை பொறுப்பேற்கும் போது பரிசோதனை செய்யப்படவில்லை எனவும் தங்க ஆபரணம் உள்ளதாக கூறப்படும் அந்த பொதி இன்னும் மத்திய வங்கியிலேயே உள்ளது எனவும் அது தெரிவித்துள்ளது.
தங்க ஆபரணங்களின் உரிமையில் மத்திய வங்கிக்கும் பங்குள்ளதாக அது பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்துள்ளது.

சட்டரீதியான உரிமையாளர்கள் 2377 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விடுதலைப்புலிகள் வசமிருந்த வங்கிகளில் தங்களது நகைகளை ஈடுவைத்திருந்ததாக அரசுக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும் குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]