போராட்டம் நடத்திய இயக்குனர் பாராதிராஜா, கவுதமன், அமீர் உள்ளிட்டோர் கைது!!

சென்னை அண்ணா சாலையில், போராட்டம் நடத்திய இயக்குனர் பாராதிராஜா, கவுதமன், அமீர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர், கட்சிகள், திரையுலகினர் என்று பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், காவிரி பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் வரை ஐபிஎல் போட்டி நடத்தக்கூடாது என்றும் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதற்கிடையில், சென்னை அண்ணா சாலையில், இயக்குனர் பாரதிராஜாவின் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், சேப்பாக்கம் மைதானத்தைச் சுற்றியிலும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்துள்ளனர்.

 

எனினும், போராட்டம் தொடந்து நடந்து வருகிறது. இது குறித்து பேசிய கவிஞர் வைரமுத்து, ஐயா நாங்கள் கிரிக்கெட்டை எதிர்த்து இங்க போராட்டம் நடத்தவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தான் போராட்டம் நடத்தி வருகின்றோம். அதுவும் அமைதியான வழியில் தான் எங்களது போராட்டம் நடந்து வருகிறது. இதில், எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்று கூறியுள்ளார்.

மண்ணுக்காக போராட போராடுகிறோம்,. நீதி கேட்டு போராடவே வீதிக்கு வந்துள்ளோம். இது காவிரிக்கு ஆதரவான போராட்டம் காவல்துறைக்கு எதிரான போராட்டம் அல்ல என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து பேசிய இயக்குனர் பாரதிராஜா கூறுகையில், நாங்கள் கண்ணியமான முறையில் தான் போராட்டம் நடத்தி வருகிறோம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில், போராட்டம் நடத்திய இயக்குனர் பாரதிராஜா, கவுதமன், அமீர் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து இரு வேன்களில் அழைத்துச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]