போராட்டத்துக்கு ஆதரவு தரும் பொருட்டு வருகை தந்தவர்களை தவிர்ந்த ஏனையவர்களை நாம் தமிழ் மக்களின் விரோதி – யாழ் பல்கலை மாணவர்கள்!

போராட்டத்துக்கு ஆதரவு தரும் பொருட்டு வருகை தந்தவர்களை தவிர்ந்த ஏனையவர்களை நாம் தமிழ் மக்களின் விரோதிகளாகவே கருதுகிறோம் – யாழ் பல்கலை மாணவர்கள்!

போராட்டத்துக்கு

எமது அழைப்பை ஏற்று இப்போராட்டத்துக்கு ஆதரவு தரும் பொருட்டு வருகை தந்தவர்களை தவிர்ந்த ஏனையவர்களை நாம் தமிழ் மக்களின் விரோதிகளாகவே கருதுகிறோம் என யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு அதரவாக கதவடைப்பு போராட்டத்தை முன்னெடுத்துவரும் பல்கலைக்கழக மாணவர்களின் அழைப்பின் பெயரில் கலந்துகொண்ட நாடாளுமன்ற மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் மத்தியிலேயே மாணவர்கள் இவ்வாறு சுட்டிக்காட்டினர்.

அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக நாம் தொடர்ச்சியாக பல்வேறு இடர்பாடுகள் சவால்களுக்கு மத்தியில் போராட்டத்தை முன்னெடுத்தவருகின்றோம். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சிறையில் வாடும் சகோதரர்களுக்காக போராட்டத்தை முன்னெடுத்துவரும் நிலையில் அரசியல் கைதிகளின் நிலைப்பாடு தொடர்பில் உரிய தீர்வுகளை எட்டும் பொருட்டு அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தோம்.

போராட்டத்துக்கு

இந்நிலையில் மக்களுக்கு பொறுப்புக் கூறவேண்டிய தருணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்ற போதிலும் அவர்கள் இங்கு வருகை தராமையானது அவர்களது பொறுப்பக்கூற வேண்டிய கடப்பாட்டை மறந்துவிட்டவர்களாக இருக்கின்றார்கள் என்றே எண்ண முடிகின்றது. அத்துடன் பொறுப்புள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களாக மக்களுக்கான அபிலாஷைகளை உதாசினம் செய்தவர்களாகவும் இருக்கின்றார்கள் என்றும் மாணவர்கள் சுட்டிக்காட்டினர்.

இரண்டு வருடங்டகளுக்கு முன்னர் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உண்ணாவிரதமிருந்த தமிழ் அரசியல் கைதிகளிடம் உண்ணாவிரதத்தை கைவிடுமாறும், விடுதலைக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக வாக்களித்திருந்த நிலையில், உண்ணாவிரதிகள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டிருந்தனர்.

ஆனால் இன்றுவரையில் அக்கைதிகளின் விடுதலை தொடர்பில் எவ்விதமான நடவடிக்கைகளையும் சம்பந்தன் எடுக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டிய பல்கலைக்கழக மாணவர்கள் தற்போது உண்ணாவிரதமிருந்து வரும் தமிழ் அரசியல் கைதிகளுக்காக கொழுப்பில் ஜனாதிபதியை தாம் சந்தித்தபோது ஜனாதிபதியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய உணவை நாம் ஒறுத்திருந்த நிலையில், இரண்டு நாள் கழிந்து கொழும்பில் தேசிய தீபாவளி தின இரவு போசன உணவை உண்டுகளிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு எப்படி மனம் வந்தது என்றும் மாணவர்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

போராட்டத்துக்கு

இதனிடையே புதிய அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தில் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை ஏன் சாத்தியமாக்கவில்லை என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது கேள்விக்கணை தொடுத்திருந்தனர்.

மேலும் எமது அழைப்பை ஏற்று இப்போராட்டத்துக்கு ஆதரவு தரும் பொருட்டு வருகை தந்தவர்களை தவிர்த்து ஏனையவர்களை நாம் தமிழ் மக்களின் விரோதிகளாகவே கருதுகிறோம் என யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]