போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சாவுடன் இளைஞன் கைது!!

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து முச்சக்கரவண்டியொன்றை வழிமறித்து திடீர் சோதனை மேற்கொண்டதில் இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பிலிருந்து வாழைச்சேனை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியொன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 22.04.2018 ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள செங்கலடிச் சந்தியில் வைத்து வழி மறித்து திடீர் சோதனைக்குட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

அவ்வேளையில் அந்த முச்சக்கரவண்டியில் பயணித்த வாழைச்சேனையைச் சேர்ந்த 18 வயது இளைஞனிடமிருந்து போதைக்காக பயன்படுத்தப்படும் 800 மாத்திரைகள் மற்றும் 5 கிராம் கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபரான வாழைச்சேனை அஸ்ஹர் பாடசாலை வீதியை அண்டி வாழும் இவ்விளைஞனிடம் தொடர்ந்து விசாரணைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸார் இந்த போதைப் பொருள் கொள்வனவு, விற்பனை மற்றும் நுகர்வு வலைப்பின்னலைப் பற்றிய விவரங்களைச் சேகரிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.

ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் சிரேஷ‪;ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸின் உத்தரவின் பேரில் குற்றத் தடுப்புப் பொலிஸ் பொறுப்பதிகாரி நிரோஷ‪ன் பெர்னான்டோவின் வழிகாட்டலில் ஏறாவூர் பொலிஸ் குற்றத் தடுப்பு புலனாய்வு அதிகாரி சார்ஜன்ற் ஈசாலெப்பை பதூர்தீன் தலைமையிலான பொலிஸ் அணியினர் இந்தக் கைது நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.