போதைபொருள் நகரமாக ஹட்டனை வர்ணிக்கவேண்டாம்

போதைபொருள் நகரம்

ஹட்டன் நகரம் போதைப்பொருள் மலிந்த இடமாக இருப்பதாக சில அரசியல்வாதிகள் மேற்கொண்டு வரும் பிரசாரங்கள் காரணமாக நகர்வாழ் பொது மக்கள் மிகவும் அதிருப்தியடைந்த நிலையில் இருப்பதாக, மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.

ஹட்டன் – டிக்கோயா நகர சபைத் தேர்தலில் ஐ.தே.கட்சியில் போட்டியிடும் தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, ஆரியகம வட்டாரத்தில் நேற்று இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், ஹட்டன் நகரம் போதைப் பொருள் விற்பனை செய்யப்படும் நகரமாக மாறி வருவதாக இ.தொ.கா.வினர் பிரசாரம் செய்து வருகின்றார்கள். இதனால், நகர் வாழ் மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள்.

நகரில் உள்ள அனைத்து மக்களுமே போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என்ற கருத்து பரப்பப்பட்டு வருவது இங்குள்ள மக்களை அகௌரவப்படுத்தும் நடவடிக்கையாகும். நகர மக்களை கேவலப்படுத்திதான் தேர்தலில் வெற்றி பெற முயற்சிக்க வேண்டுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது” என்றார்.