போக்குவரத்து பொலிஸார் மீது தாக்குதல் செய்த இளைஞன் கைது!

வவுனியா, புகையிரத நிலைய வீதியில் வைத்து போக்குவரத்து பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தாக்குதல் சம்பவமானது நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நகரப் பகுதியில் இருந்து வைரவபுளியங்குளம் நோக்கிச் சென்ற மோட்டர்சைக்கிள் ஒன்றை வீதிக் கடமையில் நின்ற போக்குவரத்து பொலிஸார் மறித்து சோதனை செய்ய முற்பட்டுள்ளனர். இதன்போது குறித்த மோட்டர்சைக்கிளை நிறுத்தாது சென்ற போது அதனை விரட்டி சென்ற போக்குவரத்து பொலிஸார் வவுனியா, புகையிரத வீதியில் உள்ள பூங்கா வீதிச் சந்தியில் குறித்த மோட்டர் சைக்கிளை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதன்போது மோட்டர்சைக்கிளில் பயணித்த இளைஞன் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார். பொலிஸாரும் அதனை தடுத்து அவரை கைது செய்ய கடும் பிரயத்தனம் செய்துள்ளனர். சுமார் 10 நிமிடங்களாக அப்பகுதியில் போக்குவரத்து பொலிஸாரும் குறித்த இளைஞரும் கைகலப்பில் ஈடுபட்டு முரண்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு மேலதிக போக்குவரத்து பொலிஸார் வருகை தந்து குறித்த இளைஞரை கைது செய்து வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதேவேளை, சம்பவம் இடம்பெற்று சிறிது நேரத்தில் மேலும் மூன்று மோட்டர்சைக்கிள்களில் பயணித்த ஆறு இளைஞர்களை வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் கடமையில் நின்ற போக்குவரத்து பொலிஸார் வீதி சோதனை செய்ய நிறுத்தியுள்ளனர்.

இதன் போது நிறுத்தாது சென்ற குறித்த இளைஞர்கள் அந்த பொலிஸாரை சீண்டும் வகையில் தமது மோட்டர் சைக்கிளில் பல தடவை சந்திக்கு அண்மையில் வருவதும் திரும்பி தப்பி ஒடுவதும் போன்ற செயற்பாட்டில் ஈடுபட்டு வந்ததாக அறிய முடிகின்றமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]