முகப்பு News Local News பொலிஸ் ஆலோசனைக்குழு செயற்படுத்துவதற்கான காரணம் என்ன?

பொலிஸ் ஆலோசனைக்குழு செயற்படுத்துவதற்கான காரணம் என்ன?

பொலிஸார் எதேச்சையான நடவடிக்கைளில் ஈடுபடுவதனால் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை இல்லாமலாக்கவே பொலிஸ் ஆலோசனைக்குழு செயற்படுவதாக ஆசியா மன்றத்தின் திட்ட முகாமையாளர் முஹம்மத் றொஷான் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய சமாதானப் பேரவையினால் முன்னெடுக்கப்படும் சமாதான செயற்பாடுகள் பற்றி மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் ஆலோசனைக் குழுக்களின் உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாவட்ட சர்வ மதப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிகள் ஆகியோருக்கிடையில் தெளிவுபடுத்தும் கொள்கை ஆலோசனைக் குழுக் கூட்டம் சனிக்கிழமை 25.08.2018 இடம்பெற்றது.

மட்டக்களப்பு கிறீன் கார்டன் விடுதியில் மட்டக்களப்பு மாவட்ட சர்வ மதப் பேரவையின் இணைப்பாளர் இராசையா மனோகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரிட்டிஷ் உயர்ஸ்தானீகராலய நிகழ்ச்சித் திட்டப் பிரதி முகாமையாளர் மிஷ்லி நிஸார் ஆசியா மன்றத்தின் திட்ட முகாமையாளர் முஹம்மத் றொஷான், ஆசிய மன்றத்தின் சிரேஷ்ட நிகழ்சித் திட்ட அதிகாரி கமாயா ஜயதிஸ்ஸ, தேசிய சமாதானப் பேரவையின் திட்ட முகாமையாளர் சம்சுதீன் ஷாபி நயாஜ் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கொள்கை அறிமுகத்தைச் செய்து வைத்து மேலும் உரையாற்றிய ஆசியா மன்றத்தின் திட்ட முகாமையாளர் முஹம்மத் றொஷான்,

அந்தந்தப் பிரதேசங்களில் நிகழும் பல்வேறு குற்றச் செயல்கள், முரண்பாடுகள் மற்றும் இன்னோரன்ன பிரச்சினைகளை சாதகமான வழிமுறையில் கையாளும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய ஸ்தாபிக்கப்பட்ட பொலிஸ் ஆலோசனைக் குழுக்கள் தற்போது சிறப்பாக இயங்கி வருகின்றன.

பொலிஸ் – பொது மக்கள் உறவை வளர்த்து இயல்பு வாழ்க்கையை சுமுகமாக்குவதே இந்த ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்பட்டதின் நோக்கமாகும்.

பொலிஸாரின் நடவடிக்கைகளை மக்களுக்கு விருப்பமுள்ளதாக எவ்வாறு மாற்றியமைத்துக் கொண்டு சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதில் சிவில் சமூகம் எவ்வாறு பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கலாம் என்பது குறித்தும் இந்த ஆலோசனைக் குழு ஆலோசனைகளை முன்வைக்கும்.

ஒருவரைக் கைது செய்வதாக, சட்டத்தின் முன் நிறுத்துவதாக அல்லது புலனாய்வு செய்வதாக இருந்தாலும் குற்றப் பரிசோதனை நடவடிக்கையாக இருந்தாலும் ஆலோசனைக் குழுக்களின் ஆலோசனையின் பிரகாரம்தான் பொலிஸ் நிலையங்கள் செயற்பட வேண்டும் என்பது பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையாக இருக்கின்றது.

அந்த வகையில் சமூகத்தில் குழப்பங்கள் ஏற்படாத வகையில் பொருத்தப்பாடான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இந்த ஆலோசனைக் குழுக்கள் உதவுகின்றன.

அந்தந்தப் பிரதேச மக்களுடைய கலாசாரங்கள், சமய வழிபாடுகள், வாழ்க்கை முறை, பிரதேசத்தில் நிலவும் சமூக பொருளாதார அரசியல் நிலைப்பாடுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஆலோசனைகளை இந்த ஆலோசனைக் குழுக்கள் பொலிஸாருக்கு வழங்குவதினூடாக பொலிஸாருக்கும் மக்களுக்குமிடையிலே இருக்கின்ற சுமுகமான உறவை மேலும் வலுப்படுத்த முடியும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com