பொலிஸார் மற்றும் படையினர் வசமுள்ள கல்வி சார் நிலையங்கள் விரைவாக விடுவிக்கப்பட வேண்டும் – ஞா.ஸ்ரீநேசன்

வடக்கு கிழக்கு பகுதிகளில் பொலிசார் மற்றும் படையினர் வசமுள்ள கல்வி சார் நிலையங்கள் விரைவாக விடுவிக்கப்பட வேண்டும். அத்துடன் அபிவிருத்தி செயற்பாடுகளில் போது கிழக்கு மாகாணமும் கூடுதல் கவனம் எடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான செயலணி தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின்; பங்கேற்புடன் திங்கட்கிழமை (27) நடைபெற்ற கூட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்

அவர் தொடர்ந்து கூறுகையில் – “வடக்கு கிழக்கு பகுதிகளில் பொலிஸார் மற்றும் படையினர் வசமுள்ள கல்வி சார் நிலையங்கள் விரைவாக விடுவிக்கப்பட வேண்டும். அந்த வகையில் மட்டக்களப்பில் கொக்கட்டிச் சோலை பொலிஸ் வசமுள்ள மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குச் சொந்தமான பட்டிப்பளை ஆசிரியர் மத்திய நிலையம், முறக்கொட்டான்சேனை ஆரம்ப கல்விக்கான பாடசாலை, குருக்கள்மடம் கலைவாணி வித்தியாலயக் கட்டிடம் போன்றன விரைவாக விடுவிக்கப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைத்தோம்;. எமது கோரிக்கையினை விரைவாக நடைமுறைப்படுத்தவதாக ஜனாதிபதி இதன் போது உறுதியளித்திருந்தார்.

உன்னிச்சைக் குளத்திலிருந்து நீரினைப் பெற்று மேற்கொள்ளப்படும் குடிநீர் விநியோகத்தின் போது உன்னிச்சை மற்றும் உன்னிச்சைக்கு அண்மையிலுள்ள கிராமங்கள் கவனிக்கப்படாமை, கைத்தொழிற்சாலைகள் திறக்கப்பட வேண்டிய அவசியம், தொழில் வாய்ப்பின்மை, வெளி மாவட்டத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சிற்றூழியர்கள் நியமனம் போன்ற விடயங்கள் தொடர்பிலும் எம்மால் விளக்கமளிக்கப்பட்டது.

அடுத்த கூட்டத்தின் போது சில பிரச்சனைகளுக்குரிய சாதகமான பதில் வழங்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

மேலும் பங்குடாவெளி, சந்திவெளி, திகிலிவெட்டை, கிரான் புலிபாய்ந்தகல், மண்டூர், குறுமண்வெளி, கிண்ணையடி, முருங்கண்தீவு போன்றவற்றிற்கான பாலங்கள் அமைக்கப்படவுள்ளமை தொடர்பில் ஆவண ரீதியான குறிப்பேட்டில் உத்தரவாதம் வழங்கப்பட்டிருந்தது. இதனை தேசிய நல்லிணக்க அமைச்சின் செயலாளர் உரையாடலின் போது உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனை விட கிரான், குடும்பிமலை, வடமுனை ஆகியவற்றின் வீதிகளும் அமைக்கப்படவுள்ளதாகவும் செயலாளர் உரையின் போது தெரிவித்திருந்தார்.

அபிவிருத்தி செயற்பாடுகளில் போது கிழக்கு மாகாணமும் கூடுதலான கவனம் எடுக்கப்பட வேண்டும் என இதன் போது நாடாளுமன்ற உறுப்பினரால் மேலும் வலியுறுத்திச் சுட்டிக்காட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]