பொருளாதார வளர்ச்சிக்கு இட்டுச்செல்ல இலங்கைக்கு உரித்தான சீர்த்திருத்தங்கள் முக்கியம் : உலக வங்கி

போட்டித்தன்மையை மேம்படுத்துதல், விரிநிலை பொருளாதார- நிதியியல் ஸ்திரத்தன்மையைப் பேணுதல் மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துதல் போன்ற விடயங்களில் இலங்கை அரசாங்கத்தினால் வழிநடத்தப்படுகின்ற மறுசீரமைப்புக்கள் வலுவான பொருளாதார வளர்ச்சி, தொழில்வாய்ப்புக்களை உருவாக்குதல் மற்றும் வறுமை குறைப்பு ஆகியவற்றிற்கு முக்கியமானது.

இந்த முன்னுரிமையான விடயங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ள உலக வங்கியின் இலங்கை அபிவிருத்தி நடப்பு நிலவர [ ஸ்ரீலங்கா டெவலப்மன்ற் அப்டேட் -(SLDU)] அறிக்கையானது கோடிட்டுக்காட்டுகின்றது.

இலங்கையின் பொருளாதாரம் மற்றும் அதன் எதிர்காலப் போக்குகள் குறித்த உலக வங்கியின் அரையாண்டு கையேடான இலங்கை அபிவிருத்தி நடப்பு நிலவரம்(SLDU), இயற்கை அனர்த்தங்களினால் ஏற்பட்ட சவால்களின் மத்தியிலும் இலங்கையின் பொருளாதார செயற்திறனானது 2016ம் ஆண்டில் திருப்திகரமானதாக அமைந்திருந்ததாக சுட்டிக்காட்டுகின்றது. அண்மைக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் ஜிஎஸ்பி பிளஸ் (GSP+) வரிச்சலுகை மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டமை போன்ற குறிப்பிடத்தக்க சாதனைகளையிட்டு இலங்கைத் தீவானது கொண்டாடி மகிழ்ந்தது.

2015ம் ஆண்டில் மொத்த தேசிய உற்பத்தியின் அளவில் 7.6 சதவிகிதமாக காணப்பட்ட நிதிப் பற்றாக்குறையானது 2016ம் ஆண்டில் 5.4 சதவிகிதமாக குறைவடைந்தது. நீண்டகாலப்பகுதியாக தொடர்ந்திருந்த வரட்சி நிலையால் விவசாயத் துறையில் ஏற்பட்ட தாக்கம் காரணமாக 2016ம் ஆண்டின் நிஜமான மொத்த தேசிய உற்பத்தி வளர்ச்சியானது 4.4 சதவிகிதமாக குறைவடைந்துள்ளது.

” இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகள், வளர்ச்சி செயற்திறனை வலுப்படுத்தியுள்ளது. இருந்தபோதிலும், மோசமான காலநிலை உட்பட ஏனைய காரணிகள் வரவுசெலவுத்திட்டத்தின் நேர்த்தியான நடைமுறைக்கிடலுக்கு தடங்கலை உண்டுபண்ணி பொருளாதார வளர்ச்சி மற்றும் ஏற்றுமதி செயற்திறனைப் பாதித்தது,” என உலக வங்கியின் இலங்கைக்கான வதிவிடப் பணிப்பாளர் ஐடா சுவராயி ரிடிஹோஃப் தெரிவித்தார்.

”நிர்மாணத்துறை மற்றும் நிதியியல், சேவைத் துறைகளில் இருந்து கிடைக்கப்பெற்ற வலுவான பங்களிப்புக்கள் நல்ல அறிகுறிகளாகக் காணப்படும் அதேவேளை போதிய அளவு வருமானங்களை அதிகரிப்பதற்கும் நாட்டு மக்களுக்கு அதிகப்படியான மற்றும் சிறப்பான தொழில்களை வழங்குவதற்கும் இலங்கை அதன் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லவேண்டியது அவசியமாகும்.” என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ளத்தக்க வகையில் நெகிழ்திறனை கட்டியெழுப்புதவற்கு ஆவன செய்தல் வேண்டும் போன்ற பரிந்துரைகள் அறிக்கையில் உள்ளது. அதற்கு மேலதீகமாக பொதுக் கடனை நிலையான பாதையை நோக்கி கொண்டுவருவதற்கு தற்போதுள்ள செலவீனத்தை கட்டுப்படுத்தும் அதேவேளை மேலும் அதிகமான வருமானத்தை திரட்ட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விரைவிலே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய உள்நாட்டு வருமானச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தலானது நல்லதோர் ஆரம்பமாக அமையும். மேல் நடுத்தர வருமானமுடைய நாடு என்ற ஸ்தானத்தை இலங்கை அடைய வேண்டுமானால் அது பொருளாதாரத்தில் போட்டித்தன்மையை ஊக்குவிப்பதுடன் ஏற்றுமதியை முன்நிறுத்திய வளர்ச்சி மாதிரியை பின்பற்றி முன்நகரும் ஆற்றலைக் கொண்டிருக்க வேண்டும்.

பொருளாதார

கட்டமைக்கப்பட்ட வருமான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தலில் காணப்படும் தாமதங்கள் , வரி நிர்வாகத்தில் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் மெதுவான முன்னேற்றம், மிகக் குறைவான அனுகூலமே காணப்படும் உலகப் பொருளாதார வளர்ச்சி , எதிர்பார்க்கப்பட்டதை விட வேகமாக உலக சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றமை ஆகியன இந்த அறிக்கையில் அபாயங்களாக இனங்காணப்பட்டுள்ளன.

மேலும் அரசாங்கத்தினால் இனங்காணப்பட்டுள்ள முக்கியமான பல சீர்திருத்தங்களை விரைவில் நடைமுறைப்படுத்துவது மிக முக்கியமானதாகும். குறிப்பாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் போன்ற அரசிற்கு சொந்தமான நிறுவனங்களுடன் தொடர்புபட்டதும், பொறுப்புக்கூறலையும் வெளிப்படைத்தன்மையையும் வலுப்படுத்தல் என்பன மிக முக்கியமானதாகும். இலங்கையில் வியாபாரத்தை முன்னெடுக்கத் தேவையான நிபந்தனைகளை எளிமைப் படுத்தும் வகையிலான விரைவான சீர்திருத்தங்கள், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பலவீனமானக் காணப்படும் போட்டித்தன்மை விடயத்திற்கு தீர்வைக் கொண்டுவருகின்ற வர்த்தக செயற்பாடுகள் ஊக்குவிக்கின்றதான சீர்திருத்தங்கள் மிக விரைவாக தேவைப்படுவதாகவும் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம அளவிலான பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளுடன் ஒப்பு நோக்குகின்ற போது இலங்கை மிகவும் குறைந்த அளவிலான வெளிநாட்டு நேரடி முதலீட்டையே உள்ளீர்க்கின்றது. “ வர்த்தகத்திற்கு இசைவாக திறந்துவிடுவதன் மூலமும் பொருளாதாரத்தை பல்துறைகளில் விரிவாக்குதன் மூலமும் வளர்ச்சிக்கான புதிய மூலங்களை நோக்கி நகர்வதற்கும் தொழில்களை உருவாக்குதற்கும் இலங்கைக்கு சந்தர்ப்பம் கிட்டும்” உலக வங்கியின் இலங்கைக்கான சிரேஸ்ட பொருளியலாளரும் இலங்கை அபிவிருத்தி நிலவரம் -ஸ்ரீலங்கா டெவலொப்மன்ற் அப்டேற் (SLDU) அரையாண்டு அறிக்கைக்கு பங்களித்தவர்களில் ஒருவருமான ரால்ஃப் வான் டூர்ன் தெரிவித்தார்.

ஏற்றுமதியையும் நிதி வருமானத்தை அதிகரிப்பதற்கு முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளானது வறியவர்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதற்கும் பொருளாதாரத்தை சரிசெய்வதற்குமான வாய்ப்பை வழங்கும் என அவர் வலியுறுத்தினார்

துண்டு துண்டாகத் தீர்வுகளைத் தேடும் போக்கிற்கு எதிராக எச்சரிக்கை செய்கின்ற இந்த அறிக்கையானது அனைத்து முக்கிய சவால்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டதாக காணப்படுவதுடன் அதற்கு விரிவானதும் ஒருங்கிணைக்கப்பட்டதுமான சீர்த்திருத்த அணுகு முறை அவசியமாகத் தேவைப்படுகின்றது எனச் சுட்டிக்காட்டுகின்றது.

கொந்தளிப்பானதொரு வெளிப்புறச் சூழ்நிலைக்கும் உள்நாட்டு அரசியல் பரிசீலனைகளுக்கும் இந்த நாடு முகங்கொடுக்க வேண்டிய கடப்பாடு உள்ளபோதிலும் உறுதிமிக்க அரசியல் விருப்பமும் அதிகார மையத்தின் ஆதரவும் இருக்குமிடத்து சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை முன்னோக்கி நகர்த்துவதற்கு உதவும் என அந்த அறிக்கை முற்றுப்பெறுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]