சட்ட விதிகளுக்கு முரணான அதிபர் இடமாற்றங்களுக்கு பொறுப்புக் கூற வேண்டும் ஆசிரியர் சங்க மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்ட விதிகளுக்கு முரணான விதத்தில் இடம்பெற்றுள்ள திடீர் அதிபர் இடமாற்றங்களுக்கு பொறுப்புக் கூற வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்க மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் தெரிவித்தார்.

இந்த வாரத் துவக்கத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள திடீர் அதிபர் இடமாற்றங்கள் தொடர்பாக ஆட்சேபனை தெரிவித்து அவர் செவ்வாய்க்கிழமை 21.11.2017 கிழக்கு மாகாண கல்வி அமைச்சுச் செயலாளர், மாகாண ஆளுநரின் செயலாளர், கிழக்கு மாகாண பிரதம செயலாளர், பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், மற்றும் வலயக்கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

அவரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்த ஆட்சேபனையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்வி வலயங்களில் இந்த வாரம் திடீரென இடம்பெற்றுள்ள அதிபர் இடமாற்றங்கள் ஆட்சேபனைக்குரியவையாக உள்ளன.

இந்த இடமாற்றங்கள் இலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசின் தாபன விதிக்கோவை அத்தியாயம் III இல் குறிப்பிடப்பட்டுள்ள இடமாற்றச் சபைகள் தொடர்பான சட்ட நியாயாதிக்கங்களுக்கு முரணாக அமைந்துள்ளது.

மேலும், பதிவு செய்யப்பட்ட அதிபர் தொழிற் சங்கங்கள் தொடர்பான வெளிப்படைத் தன்மை பற்றி இடமாற்ற சபையின் பொறுப்புக் கூறலையும் இது புறந்தள்ளுகின்றது.

கல்வி அமைச்சின் இல 98/23 சுற்று நிருபங்களுக்கு முரணாகவும் இது இடம்பெற்றுள்ளது.

மேற்குறிப்பிட்ட அதிபர் வெற்றிடங்களுக்கு வெளிப்படைத் தன்மையாக அதிபர்கள் நியமனம் செய்யப்படவில்லை.

அதேவேளை, இடமாற்ற சபை மூலம் அதிபர் நியமிக்கப்பட்டமை அதிவிசேட வர்த்தமானி 1589ஃ30 பொதுச்சேவை ஆணைக்குழுவின் கட்டளையை மீறியதாகக் கொள்ளப்படல் வேண்டும்.

எனவே இது குறித்து, தங்களின் உயர்ந்தபட்ச பொறுப்புக்கூறலுடன் வெளிப்படைத் தன்மையற்ற, சட்டவாட்சிக்கு முரணான அதிபர் இடமாற்றங்களைக் கருத்திற் கொண்டு இடமாற்ற சபையின் நம்பகத் தன்மையினை உறுதிப்படுத்தி இவ் இடமாற்றங்களை இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.