தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடைக்காலத் தடை விதித்ததுள்ள உச்சநீதிமன்றம்

நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த இடைக்காலத் தடை உத்தரவு வரும் டிசெம்பர் 7ஆம் திகதிவரை நடைமுறையிலிருக்கும் என உயர் நீதிமன்றம் கட்டளையிட்டது.

இதனால் நாடாளுமன்றைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவிப்புக்கான மேற்கொண்ட நடவடிக்கைகளை எடுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இடைக்காலத் தடை வழங்கப்பட்டுள்ளது.

இந்த வரலாற்று இடைக்கால உத்தரவை பிரதம நீதியரசர் நளின் ஜெயலத் பெரேரா தலைமையில் நீதியரசர்கள் பிரசன்ன ஜெயவர்த்தன, பிரியந்த ஜெயவர்த்தன ஆகிய மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு சற்றுமுன் வழங்கியது.

இந்த உத்தரவுக்காக முழு நாடு மட்டுமல்ல சர்வதேச சமூகமே எதிர்பார்த்துக் காத்திருந்தது.

உயர் நீதிமன்றின் இந்தத் தீர்ப்பின் மூலம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போன்று ஜனவரி 5ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறாது.

நேற்று தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது இன்று முற்பகல் தொடக்கம் நடத்தப்பட்ட
விசாரணை இன்று பிற்பகலும் தொடர்ந்து இடம்பெற்றது. இதையடுத்து, பிற்பகல் 3.30 மணியளவில், நீதியரசர்கள் குழாம் மாலை 5 மணி வரை அமர்வை ஒத்திவைத்தது.

எனினும் மாலை 5.55 மணியளவில் மீண்டும் உயர் நீதிமன்றம் அமர்வு ஆரம்பமானது. இதன்போதே இந்த இடைக்காலத் தடைக் கட்டளையை உயர் நீதிமன்ற அமர்வு வழங்கியது.

இந்த நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், உயர் நீதிமன்றத்தில் குவியத் தொடங்கியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]