பொங்கலின் சிறப்பு

“சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை” உழவுத் தொழிலிருக்கும் நெருக்கடிகளை எண்ணி, பல்வேறு தொழில்களுக்குச் சென்றாலும் உலகம் ஏரின் பின்தான் இயங்குகிறது. அதனால் எத்தனை வருத்தம் இருந்தாலும் உழவுத் தொழிலே முதன்மையானது என உழவின் மேன்மையை எடுத்துரைக்கிறார் வள்ளுவர். தைத்திருநாள் அவ்வுழவிற்கு உறுதுணையாயிருந்த இயற்கைக்கு உழவன் நன்றி நவில்கும் நன்னாளாகும். இப்பண்டிகை நான்கு நாட்களுக்கு வெகுவிமரிசையாக் கொண்டாடப்படுகிறது. அவை முறையே போகிப்பொங்கள், தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் காணும்பொங்கல்.
      முதல்நாள் விவசாயத்திற்குத் தேவையான மழையைப் பொழிந்த வானுக்கு நன்றி செலுத்துவதில் தொடங்குகிறது. மார்கழிக் கடைசியான அன்று “பழையன கழிதலும் புதியன புகுதலும்” எனும் கூற்றிக்கு ஏற்ப தேவையற்ற பழையனவற்றை அதிகாலை தீயிட்டுக் கொளுத்திய பின் சிறுவர் சிறுமியர் அதைச்சுற்றி ஆடிப்பாடி மகிழ்வது பண்டைய வழக்கமாய் உள்ளது.
        தை முதல் நாளே உலகத்தமிழர் அனைவராலும் தைப்பொங்கல் திருநாளாகக் கொண்டாடுகின்றனர். அதிகாலையில் எழுந்து நீரடி, புத்தாடையுடுத்தி, வாசலில் கரும்பும் முற்றத்தை மாவிழை தோரணங்களால் அலங்கரித்துக் கோலமிட்டு, புது மண்பானையில் பசும்பாழூற்றி, அது பொங்கி வழியும்போது “பொங்கலோ பொங்கல்” என முழக்கமிட்டு பின் அறுவடை செய்த புது அரிசியை அதிலிட்டு பொங்கல் சமைத்து, அதனை ஆதவனுக்குப் படைத்து தம் நன்றியைச் செலுத்துவார்கள். பின்னர் சுற்றதாருக்கும் பொங்கலைக் கொடுத்துண்டு மகிழ்வர்.
  மூன்றாம் நாள், உழவனுக்கு உற்றநண்பனாய் உழவிற்கு உறுதுணையாய் இருந்த காளை மாடுகளுக்கு நன்றி சொல்லும் நாள். மாட்டுத் தொழுவத்தை சுத்தப்படுத்தி, கோலமிட்டு, மாவிழை தோரணங்களால் அலங்கரித்து, மாடுகளை நீராட்டி அலங்கரிப்பார்கள். அதன்பின் பொங்கலிட்டு மாடுகளுக்கு படைப்பார்கள். பின்னர் காளை மாடுகளுக்கு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும். இப்போட்டி மஞ்சுவிரட்டு, ஏறுதழுவுதல் மற்றும் ஜல்லிக்கட்டு என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. திமிறி வரும் காளை மாட்டின் திமிலை இறுக்கி அணைத்து ஐம்பதடி தூரம் வரை போக வேண்டும், அப்படிப் போனால் வெற்றி பெற்றதாய் கருதப்படும். ஒரு மாட்டின் திமிலை ஒருவர் மட்டுமே பிடிக்க வேண்டும், வேறு எவ்வகையிலும் மாட்டை தும்புறுத்தக்கூடாது. இவையே விதிமுறைகளாகும்.
     நான்காம் நாளை காணும் பொங்கலென அழைப்பர். அன்று குடும்பத்துடன் சொந்த பந்தங்களின் வீடுகளுக்குச் சென்று ஒன்றாய் விருந்துண்டு அந்நாளை மகிழ்ச்சியுடன் கழிப்பார்கள்.