பெற்றோருடன் கோபித்துக் கொண்டு வெளிநாட்டுக்கு சென்ற சிறுவன்

பெற்றோருடன் கோபித்துக் கொண்டு, 12 வயது சிறுவன் ஒருவன் பாலிக்கு தனியாக பயணம் செய்த சம்பவம் குறித்து விசாரிக்கப்படும் என ஆஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேஷியாவிலுள்ள பாலித்தீவுக்கு செல்ல முடிவு செய்திருந்த சுற்றுலாவை பெற்றோர் ரத்து செய்த பின்னர், சிட்னியில் இருந்து கொண்டு, சிறுவன் விமான பயணச்சீட்டு மற்றும் தங்குமிடங்களை இணையம் மூலம் முன்பதிவு செய்துள்ளான்.

மேலும், தனது பயணத்துக்கு பெற்றோரின் கடனட்டையை அச்சிறுவன் பயன்படுத்தியுள்ளான்.

அவனுடைய பாஸ்போர்ட் மற்றும் பள்ளி அடையாள அட்டையை மட்டுமே சமர்ப்பித்துள்ள இந்த சிறுவன் பெர்த் வழியாக விமான பயணம் மேற்கொண்டுள்ளான்.

மார்ச் 17ஆம் திகதி இந்த சிறுவன் பாலித் தீவில் இருந்தது தெரியவந்தது என்று ஆஸ்திரேலிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வீட்டை விட்டு வெளியேறிய ஒன்பது நாட்களுக்கு முன்னதாக அச்சிறுவன் காணாமல் போனதாகவும், காணமல் போன தினத்திலிருந்து அந்த சிறுவன் பள்ளிக்கு செல்லவில்லை என்றும் புகார் வந்ததாக அவுஸ்திரேலிய போலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பாலித்தீவில் எத்தனை நாட்கள் அவன் இருந்தான் என்று அவர்கள் தெரிவிக்கவில்லை.

சிட்னியில் விமானத்தில் ஏறுவதற்கு சுய சேவை சோதனை முனையத்தை பயன்படுத்திய அந்த சிறுவன் விமானத்தில் பெர்த் சென்று அங்கிருந்த இணைப்பு விமானத்தில் பாலிக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக உள்ளுர் தொலைக்காட்சி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது

இந்த சிறுவன் பெர்த்திலுள்ள விமான நிறுவன அதிகாரிகள் ஒரேயோரு முறை தன்னை விசாரித்ததாக கூறியுள்ளான்.

“நானொரு துணிகர செயலை செய்ய விரும்பியதால், இது மிகவும் நன்றாக இருந்தது” என்று கூறும் சிறுவன், தன்னுடைய சகோதரி வந்து சேர காத்திருப்பதாக கூறி பாலித்தீவிலுள்ள ஹோட்டல் அறையில் தங்குவதற்கு அனுமதி பெற்றிருக்கிறான்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]