பெரும் கடன் சுமையிலிருந்து தப்பித்த இலங்கை!

 

இலங்கையின் தென்பகுதியில் அமைந்திருக்கும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை மேம்படுத்துவதற்கான 837 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான ஒப்பந்தத்தில் சீனாவுடன் இலங்கை இன்று கையெழுத்திட்டது.

இந்தத் துறைமுகத்தை சீனா தனது இராணுவத்திற்குப் பயன்படுத்தக்கூடுமோ என்ற கவலைகளின் காரணமாக இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தாமதம் ஏற்பட்டுவந்த நிலையில் தற்போது நல்லமுறையில் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமை விசேட அம்சமாகும்.

மேலும், ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையிலான கடல் வழியில் முக்கியமான இடத்தில் அமைந்திருக்கும் அந்தத் துறைமுகத்திலிருந்து வர்த்தக ரீதியான நடவடிக்கைகளை மட்டுமே சீனா மேற்கொள்ளும் என அரசு உறுதிமொழியளித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் பணம் வெளிநாட்டுக் கடன்களை அடைக்க உதவும் என இலங்கை அரசு எதிர்பார்க்கின்றது.

தற்போது கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தத்தின்படி சீன அரசுக்குச் சொந்தமான நிறுவனம் இந்த துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துக்கொள்ளும். ஒரு தொழில்மண்டலத்தை உருவாக்குவதற்காக துறைமுகத்திற்கு அருகிலுள்ள 15 ஆயிரம் ஏக்கர் நிலமும் அதற்குத் தரப்படும்.

இந்தத் திட்டத்தின் காரணமாக துறைமுகத்தைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான கிராமங்களைச் சேர்ந்தவர்களை வெளியேற்ற வேண்டியிருக்கும். ஆனால், அவர்களுக்குப் புதிய நிலம் வழங்கப்படும் என அரசு தெரிவிக்கிறது. இலங்கையில் 26 ஆண்டுகளாக நடந்துவந்த உள்நாட்டுப் போர் 2009ல் முடிவடைந்த பிறகு, சீனா மில்லியன் கணக்கான டாலர்களை இலங்கையில் முதலீடுசெய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]