பெருந்தோட்ட பெண்களின் சமூக அங்கீகாரத்துக்கு அரசியல் உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் : அனுஷா சந்திரசேகரன்

நடைபெறவுள்ள சகல தேர்தல்களிலும், பெண்களின் விகிதாச்சாரம் உரியமுறையில் அதிகரிக்கப்படுவதினை முழு மலையக அமைப்புக்களும் உறுதிசெயதுக்கொள்ள வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளர் நாயகம் செல்வி அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

ஒவ்வொரு தேர்தலும் எமது சமூக இருப்புக்கு சவால் விடுவதாகவே அமைகின்றன. எமது சமூகத்திலிருந்து தெரிவாகும் பிரதிநிதிகளின் எண்ணிக்கையிலேயே எமது சமூகத்திற்கான அடையாளமும் உறுதியாக பதியப்படுகின்றது. நாம் எம்மை இந்திய பிரஜைகளாக பதிவு செய்துக்கொள்வதில் அதிக அக்கறை எழுதிக்கொள்ளாததன் விளைவை எமது அடுத்த சந்ததியினரே அனுபவிப்பார்கள்.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் நாம் என்ன விகிதத்தனர் என்பதிலேயே எமக்கான அரச உரிமைகள் அனைத்துமே தீர்மானிக்கப்படுகின்றன. கிராம சேவகர் பிரிவு, உதவி அரசாங்க அதிபர் எண்ணிக்கை பிரதேசசபைகளின் எண்ணிக்கை இவை அனைத்தையுமே தீர்மானிக்கும் இவ்விடயத்தில் நாம் அக்கறை காட்டுவதில்லை. அது போலவே மக்கள் பிரதிநிதிகளை உரியமுறையில் தெரிவுசெய்வதும் முக்கியமாகின்றது. நகரசபை முதல் நாடாளுமன்றம் வரை எமக்கான பிரதிநிதித்துவத்தை அதிகரித்துக்கொள்வதன் ஊடாக நாட்டில் எமக்கான உரிமைகளுக்கான குரல் சக்தி பெறுகின்றது.

பெருந்தோட்டத்துறை பெண்கள் இலங்கையில், பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யும் அளவுக்கு இவர்களுக்கு சமூக அங்கீகாரம் கிடைக்கவில்லை. நடைபெறவுள்ள தேர்தல்களில் பெண்களின் விகிதாச்சாரம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற சரத்தை மலையக அமைப்புக்கள் சரியாக பயன்படுத்திக்கொண்டால் அது பிரதிநிதித்துவத்தை மாத்திரமல்ல பெண்களுக்கான சுய கௌரவத்தையும் அதிகரிக்கும்.

எந்த சமூகங்களைவிடவும் எமது சமூகத்தில் பெண்கள் பல தரப்பட்ட மட்டங்களில் வாழ்கின்றார்கள். நேரடியாக தேயிலை தொழிலில் ஈடுபட்டவர்கள், கல்வி கற்ற அரச, தனியார் துறைகளில் தொழில் செய்பவர்கள், கல்வியை பூரணப்படுத்தாமல் தொழிலுக்காக இடம்பெயர்ந்து வாழ்பவர்கள் தொழிற்சங்கங்களில் ஈடுபாடு கொண்டவர்கள் என்று பல மட்டத்தவர்களை கொண்டுள்ள சமூகத்தின் பிரதிநிதியாக பெண்கள் தெரிவுசெய்யப்படும் போது சகல மட்டத்திலிருந்தும் இதற்கான தேர்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு தெரிவுசெய்யப்படுபவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக வெல்வதற்கான சகல ஒத்துழைப்புகளையும், அரசியல் தொழிற்சங்க அமைப்புக்கள் நேர்த்தியாக மேற்கொள்ளவேண்டும்.

ஏனைய காலங்களைவிடவும் இன்று பிரதான மலையக அமைப்புக்கள் ஒன்றிணைந்து தமிழ் முற்போக்குக் கூட்டணியை உறுவாக்கியுள்ளமை எமக்கு கிடைத்துள்ள பலமாகும். இதனூடாக ஏற்கனவே நாம் இழந்திருந்த நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை கண்டி, கொழும்பு, பதுளை மாவட்டங்களில் பெற்றுள்ளோம். இதனை உதாரணமாகக்கொண்டு இம்முறை மலையக மக்கள் செறிவாக வாழும் அனைத்து பிரதேசங்களிலும், பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும். இதன் ஊடாகவே அரசியல் பயணத்தில் நாம் இன்னுமொரு அர்த்தமுள்ள பயணத்துக்கு தயாராகுவோம்.

புதிய தேர்தல் முறையின் கீழ் பெண்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவத்தை 25வீதம் கட்டாயமாக்கப்படவுள்ளது. மலையக பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவமும், தமிழ் முற்போக்குக் கூட்டணி என்ற ஒன்றுப்பட்ட சக்தியாகவே பாதுகாக்கப்படும். வேறு எக்காலத்தையும் விட மலையக அமைப்புக்களின் ஒற்றுமை பலப்படுத்த வேண்டும் தனித்து செயல்படுவதன் ஊடாக இதனை சாதிக்க முடியாது என்பது கடந்தகால அனுபவமாகும் என்றும் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]