பெண்ணை வழிமறித்து தொல்லை கொடுத்த வாலிபரை தட்டிக்கேட்ட தந்தை அடித்துக்கொலை

தமிழகத்தில் பெண்ணை வழிமறித்து தொல்லை கொடுத்த வாலிபரை தட்டிக்கேட்ட அந்தப் பெண்ணின் தந்தையை வாலிபர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ரத்தினக்கோட்டையைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (52). இவரது மகள் சரண்யா (19) ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். வேலைக்குச் சென்று விட்டு வீட்டுக்கு வந்த சரண்யாவை, அதே ஊரைச் சேர்ந்த செல்வம் (25) என்பவர் வழிமறித்துப் பேசியுள்ளார். திருமணம் செய்துகொள்ளும் படி டார்ச்சர் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த மகாலிங்கம், என் மகளை வழிமறித்து ஏன் டார்ச்சர் கொடுக்கிறாய் என்று கண்டிப்புடன் தட்டிக்கேட்டுள்ளார். இதுகுறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த செல்வம் மகாலிங்கத்தின் நெஞ்சுப்பகுதியில் ஓங்கிக் குத்தினார். இதனால், நிலைகுலைந்த மகாலிங்கம் கீழே விழுந்தார். பேச்சு மூச்சின்றிக் கிடந்ததால், பயந்துபோன செல்வம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அந்தப் பகுதி வழியாக வந்த பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், கடுமையாக வேதனை அடைந்த சரண்யா தந்தையின் அருகில் அமர்ந்து, தந்தை மீண்டும் உயிர்பிழைக்க வேண்டும் என்று கதறியதைப் பார்த்த அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவைத்தது. சம்பவம் குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை தேடி வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]