பெண் பாவையாக்கப்பட்டாள்

னியுடமை என்ற பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட சமூக அடித்தளங்கள் அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், பண்பாடு, சமூக ஒன்றியல், ஒட்டு மொத்த மனித நடத்தைகள் என்ற சமூக இயங்கு கோல்களை அடிப்படையாகக் கொண்ட சக்திகள் மீது தாக்கம் செலுத்தியதுடன் அவற்றின் மீதான ஒடுக்கு முறைகளையும் கட்டவிழ்த்து விட்டன. 20ம் நூற்றாண்டுக்கான காலப்பகுதிகள் சமூகத்தின் பல்வேறு பரிமானங்களில் ஒடுக்கப்பட்ட உணர்வுகள் விடுதலைபெற எத்தனித்ததுடன் முதலாளித்துவம் மீதும் அவற்றின் ஏகாதிபத்திய மற்றும் சுரண்டல்கள்மீது அழுத்தங்களை பிரயோகிக்க களங்களை ஏற்படுத்திக் கொண்ட நூற்றாண்டாக அமைந்தது.

பெண்ணின ஒடுக்கல் சார் ஓர் கண்ணோட்டம்.

அந்த வகையில் பெண்ணியம் சார்ந்த ஒவ்வொரு துறைகளில் ஒவ்வோர் அடித்தள கட்டமைப்புகளிலும் பேசப்பட வேண்டியதாகவும் ஒடுக்குவோர், ஒடுக்கப்படுவோர் இடையேயான சிந்தனைத்துவ வளர்ச்சியை அறிவியல் ரீதியாக சிந்திக்கக்கூடிய பல பரிமானங்களை உடைய காலப்பகுதியாக அமைந்ததுடன் பல திறந்த சிந்தனைகளுக்கும் வழி கோரியது. ஆகவே இவ்வாறான காலப்பகுதியை மையமாகக் கொண்டு எழுந்த சிந்தனைகளை பெண்ணியத்துடன் தொடர்புபடுத்தி பார்க்க முற்படுகையில் ஓர் பெண் ஏன்? ஆண் பெண் என்ற ரீதியில் இரண்டாம் நிலைப்படுத்தப்பட்டாள் என்ற கேள்வி எழுகின்றது. ஆரம்பகால பொதுவுடமைச் சமூகம் உழைக்கும் வர்க்கம் என்றதன் அடிப்படையில் தாய்வழி கோட்பாடடை மையமாகக் கொண்டு பெண் ஆதிக்கமுடையவளாகவும் சமூகத்துடன் ஒன்றிணைந்து உழைக்கும் கரங்களை இணைப்பவளாகக் காணப்பட்டாள். சொத்துரிமை அதன் வாரிசுக்கான இறைமை என்பன பெண் வர்க்கத்தை சார்ந்ததாகவே அமைந்திருந்தன. ஆண் பிற நிலங்களை நாடி செல்பவனாகவும், உணவு வகைகளைத் தேடுபவனாகவும் தன் பணியை ஆற்றினான். இயற்கையுடன் அதிக ஈடுபாடுடைய பெண்ணினம் அவற்றின் மீது கொண்ட காதல் அவற்றினுடனான ஈர்ப்பு, மரம், செடி, கொடிகளை தாமே நட்டு ஓரிடத்தில் பயிர் செய்யும் முறையை கண்டறிந்து கொண்டனர். இவற்றினுடைய தாக்கம் அலைந்து திரிந்து கொண்டிருந்த ஆண்வர்க்கம் ஓரிடத்தில் திரட்டப்பட்டனர். கலப்பை ஏற்று உழைக்கும் மனோபாவம் ஆண்களிடம் புகுத்தப்பட்டது. சமூத்துடன் இணைந்து உழைக்கும் நிலைப்பட்ட பெண் மனையைப் பராமரிப்பவளாகவும் பிள்ளை வளர்ப்பை கடமையாகக் கொண்டவளாக மாற்றப் பட்டாள். ஒருதார திருமணத்தினுடைய தாக்கம் பெண் முடக்கப்பட்ட தன்மைக்கு வழிகோரியதுடன் ஆண் வாரிசுரிமை வளர்ச்சியடையலாயிற்று. இங்கே பெண் பாவையாக்கப்பட்டாள். பெண் இரண்டாம் பட்சம் ஆனாள்.

பெண் என்றவுடன் எம் மனநிலை

பெண் என்றவுடன் எம் மனநிலை

பெண் என்றவுடன் எம் மனநிலையில் தோன்றுகின்ற உணர்வு உடலியல் கூறுகளை மையமாகக் கொண்டு அழகு, மென்மை, அடக்கமானவள், நளினம் உடையவள், பாலியல் இன்பம் தரக்கூடியவள் ஆகவும் ஆண் என்றவுடன் வீரம், தலைமை, பாதுகாப்பு என்ற கண்ணோட்டத்திலே எம்மால் நோக்க முடிகின்றது. பெண்ணினது உளவியல் தேவைகளை ஈடுசெய்யக் கூடிய ஆண்கள் எம்மத்தியில் உள்ளனரா என்ற கேள்வியை மையம் கொண்டு நோக்குகையில் அவ் உளத் தேவையை பூர்த்தி செய்கின்ற நிலை எம் மத்தியில் காணப்பட்டு இருந்தால் இன்று பெண்ணினப் போராட்டம், பெண்விடுதலை இயக்கம், பெண் ஒடுக்கு முறை என பெண்ணியம் சார் விடயங்கள் எம் மத்தியில் பேசப்பட வேண்டிய அவசியம் இருக்காது.

பெண் ஏன் நிர்வாண கோலமாக்கப்பட்டாள் வழிபாட்டு தலங்களில்? பெண் இனமே முதல் அடிமை இனம் என்ற கூற்று பெண்ணியல் ஆய்வாளர்களால் பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளன. ஒரு தார திருமணக்கொள்கை கட்டமைக்கப்பட்டவுடன் ஆடை, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட ஆண்களின் அஃறிணைப் பொருளாகவே சித்தரிக்கப்பட்டாள் பெண். பல சபையினர் முன்னிலையில் ஆடைகளை அவிழ்த்து அங்க அசைவுகளை காட்டும் ஆபாச பொருளாக்கப்பட்டாள் பெண். எமது முன்னைய கலைஞர்கள் அழகுப் பொருளாக பெண்ணைப் பார்த்ததனால் தான் என்னவோ நிர்வாண கோலத்தில் கட்டிடக் கலைகளை உருவாக்கினர். ஒரு புறம் அழகு பாவைகளாக்கப்பட்ட பெண் இன்னொரு புறம் மந்திர மாயங்களை உடையவளாக பெண்ணைக் கட்டமைத்து அமானுச
சக்தி, தெய்வ சக்தியாக பார்க்கலாயினர். இதற்கு இலக்கியங்கள் கூட விதிவிலக்கல்ல. பெண்ணின் உடைய ஒவ்வோர் உடற்கூறுகளையும் வர்ணித்து அவற்றை காவியங்களாக்கவே எமது முன்னைய இலக்கியவாதிகள் முற்பட்டனர்.

ஆயுத கலாச்சாரத்தால் ஒடுக்கப்படும் இனங்கள் உடைய உளநிலையை விட மிக கொடுமையானது சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட ஒரு சில சிந்தனைக் சக்திகளால் பெண்கள் ஒடுக்கப்படுவதாகும். குடும்பம் என்கின்ற போர்வைக்குள் ஓர்மாயச் சங்கிலியால் பெண் இனம் பிணைக்கப்பட்டு இருந்தது. பெண்கள் பிறந்தது முதல் இறப்புவரை பெண் என்ற காரணத்திற்காக அவளது பல சுதந்திரங்கள் முடக்கப்பட்டு கதவுகள் சாத்தப்பட்டன. குழந்தை திருமணம், பல இடைவெளி வயது கூடியவரைத் திருமணம் செய்தல், உடன் கட்டை ஏறுதல், கன்னி தானம், விதவைக் கோலம் என பல சமூக ஒடுக்குமுறைகள் கலாச்சார ரீதியான பொய் கட்டமைப்பால் மெழுகப்பட்டு குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளான ஆசியப் பிராந்தியங்களில் பின்பற்றப்பட்டன. ‘தாலி என்றால் என்ன அம்மா? அதை நான் ஏன் கட்டவேண்டும்’ என்று கேள்வி எழுப்புகின்ற பிஞ்சு வயதிலே பெண் சிறை வைக்கப்பட்டாள்.

ஆண்பிள்ளை பிறந்தால் கற்கண்டு கொடுத்து கொண்டாட்டம், பெண்பிள்ளை பிறந்தால் முகச்சுழிப்பு, குடும்பத்தில் ஒரு பாரம் ஆகவும், கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்கின்ற சமூகங்களையும் நாம் கடந்துதான் வந்துள்ளோம்.

 

ஏன்? ஒழுங்கமென்பது பெண்களுக்கு மட்டுமான ஓர் சமூக விழுமியமா?

woman stereo type

ன்? எதற்காக? என்ற காரணங்கள் இன்றி பாரம்பரியமாகப் பின்பற்றப்படும் சடங்கு, சம்பிரதாயங்களில் கடைப்பிடிக்கப்படும் பெண் ஒடுக்குமுறை என்பது மிக கொடூரமானது.  நவீன மயமாக்க சூழல் ஆனது எல்லைகள் தாண்டி வளர்ச்சி அடைந்து கொண்டு சென்றாலும் உயர் கல்வித்துறை, உயர் தொழில்கள், கலை இலக்கியங்களில் பங்கு, போராட்டங்கள், பிற சமூக செயற்பாடுகள் என்ற நிலையையும் தாண்டி ‘ என்னதான் இருந்தாலும ;அவள் அப்படிப் பேசியிருக்கக்கூடாது’ என்ற ஓர் வசனம் இன்றைய சூழ்நிலைகளிலும் அவளைக் கட்டுப்படுத்துகின்றது என்றே கூறலாம். ஆண்பால் சாராமல் பல பெண்பால் சொற்கள் எம் மத்தியில் பெண் அடக்குமுறைக்கான உத்திகளாக உள்ளன. வேசை, தேவடியாள், விதவை, அமங்கலி, விபச்சாரி என்பன பெண்களுக்கு உரியனவாகவே சமூகத்தில் நிலவுகின்றன. ஏன்? ஒழுங்கமென்பது பெண்களுக்கு மட்டுமான ஓர் சமூக விழுமியமா? கணவனை இழந்தவளுக்கு விதவைக் கோலம் என்றால் மனைவியை இழந்தவனுக்கு!, உடன் திருமணம், சமூகப் பாகுபாடுகள் எல்லாம் எம்மால் வகுக்கப்பட்டவை. குடும்ப அலகு என்பது ஓர் ஆண்வர்க்கத்தினுடைய அதிகாரத்திற்கான ஓர் முக்கிய களம். தந்தை மகள் என்ற உறவு அடிப்படையில் பெண் முதலில் ஒடுக்கப்படுகின்றாள். பின்னர் கணவன் மனைவி, பிற்பாடு மகன் தாய் என்ற பரிமானங்களில் பெண் நிலை ஒடுக்கலை சந்திக்கின்றது.

உழைப்பு ரீதியான சுரண்டல், பெண் இனத்தை விட்டு வைத்ததா என்ன? ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்களால் செய்யப்படும் அன்றாட வேலைக்கட்கு எவ்;வித பெறுமதியும் காணப்படுவதில்லை. பெண் என்றால் வீட்டு வேலைகளைச் செய்யத்தானே வேண்டும் என்று கொள்கை முன்தள்ளி வந்துவிடும். குடும்பம் என்ற நிலையைத் தாண்டி தொழிற்சாலைகள், தோட்டத்தொழில்கள், அவற்றுக்கான ஊதியம் என வரும்போது அதிலும் பாகுபாடு. குறிப்பாக இன்றைய பல்தேசியக் கம்பனிகளின் உடைய தாக்கம் இளம் வயதுப் பெண்களை அதிகம் வேலைக்கு உள்வாங்குகின்றனர். அதிலும் ஆடைத் தொழிற்சாலைகளில் எண்பது வீதமானவர்கள் கற்றலை முறையாகப் பூர்த்தி செய்யாத கிராமத்து இளம் பெண்களாவர். இவர்களது கடுமையான உழைப்பு இங்கு சுரண்டப்படுவதுடன் மிகக் குறைந்த ஊதியம் வழங்கப்பட்டு கோடி இலாபம் அடைகின்றனர். அவர்களது வேலைத்தளத்தை உறுதி செய்து கொள்வதற்காக போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாக்கப்படுகின்றார்கள். இவற்றையும் தாண்டி அதிகமான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுகின்றனர்.

குடும்பம் அதனைத் தாண்டிய சமூகம் என்ற நிலையில் பெண் ஒடுக்கப்படுகின்றாள். இன்றைய சினிமாவாக இருக்கட்டும், விளம்பரங்களாக இருக்கட்டும் பெண்ணை ஓர் ஆபாசப் பொருளாகப் பயன்படுத்துகின்ற ஓர் நுகர்வுக் கலாச்சாரமே இங்கு காணப்படுகின்றது. பெண்களே ஒழுக்க சீர்கேடுகளுக்கு காரணம் என கூறிக்கொள்கின்ற ஆணாதிக்க மனநிலை எம்மத்தியில் இன்றும் உள்ளது.

சீதனக் கலாசாரம்dowry system

ற்கனவே குறிப்பிட்டது போன்று தனியுடமை என்கின்ற பொருளாதார கட்டமைப்புடன் உருவாகிய பெண் அடிமை முறையை இன்றைய நவீன யுகத்தையும் தாண்டி நிலை நிறுத்தி வைத்துள்ள ஓர் பொருளாதார, கலாசார நடைமுறைகளில் ஒன்றே சீதனமுறை. பெண்கள் தங்களிற்கான கௌரவம் அந்தஸ்தை ஓரளவேனும் நிலைநிறுத்த இந்த சீதனக் கலாசாரம் பயன்பட்டது.

சீதனக் காலாசாரம் ஆரம்பகாலங்களில் ஆணினமே பெண்களை பணம், பண்டம் கொடுத்து வாங்குபவர்களாகவும் பிற்காலங்களிலே பெண் வீட்டார் ஆணை செல்வச் செழிப்புடன் அழைப்பவர்களாக நிர்ப்பந்திக்கப்பட்னர். சிலப்பதிகார காலப்பகுதியிலே இத்தகைய இரு வழக்குகளும் நடைமுறையில் இருந்து உள்ளன. பெருஞ் சீதனத்துடன் கண்ணகியை மணம் முடித்த கோவலன் வெகுமதி கொடுத்தே மாதவியைப் பெற்றுக் கொள்கின்றான். பெண்ணினம் ஒடுக்கப்படும் பல தளங்களில் இச் சீதனமுறையும் ஒன்று. மணவயது எட்டியும் மணம் ஆகாமல் இருக்கும் பெண்கள் என்ற நிலையையும் தாண்டி அவளது பெற்றோர், மற்றும் மணம் ஆகாமல் இருக்கும் சகோதரிகளை கரை சேர்க்க உழைத்துக் கொண்டிருக்கின்ற ஆண்கள் என ஓர் ஒட்டு மொத்த குடும்பமும் சீதனக் கலாசாரத்தால் பாதிப்பிற்குள்ளாகின்றனர். இங்கு அவலம் என்வென்றால் மனிதனால் படைக்கப்பட்ட பணத்திற்கு மனிதனே விலைபோகும் பரிதாப நிலை உருவாகி உள்ளமை ஆகும். இன்னொருவருடைய உழைப்பைச் சுரண்டியும் கொள்ளை இலாபம் ஈட்டுவதற்கும் லஞ்சம், ஊழல்கள் மூலம் பணம் சம்பாதிப்பதற்கும் இச் சீதனை முறைக்கும் என்ன வேறுபாடு உள்ளது.

Tea picker in a tea plantation in the 'tea country' of Sri Lanka, Asia, by documentary travel photographer Matthew Williams-Ellis
Tea picker in a tea plantation in the ‘tea country’ of Sri Lanka, Asia, by documentary travel photographer Matthew Williams-Ellis

இவற்றையெல்லாம் தாண்டி அரங்கத் துறையில் பெண்ணின ஒடுக்கு முறை என்பது கிரேக்க கால வரலாற்றை புரட்டிப்பார்க்க வேண்டும். நாடக ஆற்றுகைகள் இடம் பெறும் போது பெண்கள் பார்வையாளர்களாகக் கூட அனுமதிக்கப்படவில்லை. பெண் பாத்திரங்களை ஆண்களே ஏற்று நடித்தனர். இந்திய அரங்க வரலாற்றில் கூட இது விதிவிலக்கல்ல! பெண்கள் நாடகம் பார்க்க போனால் தண்டம் வசூலிக்க வேண்டும் என அர்த்த சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. எமது பாரம்பரிய கூத்தாற்றுகை முறைகளில் கூட பெண்களினுடைய பங்கு கிடையாது. பெண் பாத்திரங்களை ஆண்களே ஏற்கின்றனர். இதில் குறிப்பிடப்பட வேண்டிய விடயம் இன்றைய நவீன சூழலிலும் கூட கோயில் முற்றல்கள், அரங்கேற்ற விழாக்களில் ஆடப்படும் கூத்துக்களில் பெண்கள் ஈடுபாடு இன்றியே காணப்படுகின்றது. ஆனால் பல்கலைக்கழக மற்றும் கல்விசார் மட்டங்களில் பெண்களின் ஆற்றுகைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தனது குடும்பநிலை, வறுமை, ஊதாரியான கணவன், பிள்ளை வளர்ப்பு, அவர்களது கல்வி என்ற காரணங்களுக்கு அமைய ஐரோப்பிய மற்றும் மத்தியகிழக்கு நாடுகட்க்கு வேலை நிமித்தம் செல்லும் பெண்களின் நிலை கொடூர வதைகளிலே முடிவடைகின்றன. பெண்விடுதலை என்பது சமூக விடுதலையின் ஒரு பகுதி என்ற கண்ணோட்டத்துடன் நோக்கும் போது பெண்கள் தங்களது விடுதலைக்கான போராட்டத்தை செய்ய சமூகத்துடன் இணைந்து விட்டனர். தமிழின விடுதலைக்கான ஆயுதம் ஏந்திய போராளிகளாக தம் பரிமானத்தை வளர்த்து கொண்டு உயிர் தியாகங்களை ஈழத்திற்கு ஈட்டிக்கொடுத்தனர். மலையகத்தில் வாழும் தோட்ட தொழிலாளி பெண்கள் உடைய சிறைவைக்கப்பட்ட பல்லாண்டு வாழ்வு ஊடாக நாட்டின் உடைய நிரந்தரப் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக உள்ளனர்.tamil woman classic

ஆகவே மனிதத்தின் உடைய விழிப்புணர்வே இன்று அவசியப்படுகின்றது. ஆணாக இருக்கட்டும் சரி பெண்ணாக இருக்கட்டும் அடிமனதின் ஆத்மாவை நேசிக்கின்ற புரிந்துணர்வு எம்மத்தியில் வேரூன்றவேண்டும். குடும்ப வாழ்வில் ஒவ்வொரு பெண்களுடைய பூரணப்படாத உளத் தேவைகளை நிவர்த்தி செய்கின்ற மனோபாவம் ஒவ்வோர் குடும்ப தலைவனிற்கும் உரித்துடையது என உணர வேண்டும். அவ்வடிப்படை உணர்வே பெண் விடுதலைக்கு முதற்படியாக அமையும்.

பழமைவாத பெண் இலக்கணங்களான அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு குணநலன்களை புறந்தள்ளியஇ கவிஞர் பாரதியின் உடைய புதிய குரல் ஒவ்வோர் இளைஞர்கள் மத்தியில் ஒலிக்க வேண்டும். ‘நாணமும் அச்சமும் நாய்கட்கு வேணாமாம்’. நடைமுறை என்ற கருத்தியல் ஊடாகவே மாற்றத்தைச் செய்ய முடியும். மானிடத்தை நேசிக்கும் ஒட்டுமொத்த சமூக விடுதலை உடன் பெண் குலத்தின் நீதியை நிலை நாட்ட ஒன்றுபடல் அவசியம்.

பாரம்பரியம் பாரம்பரியம் என பழமைவாதம் ஊடாக செய்யும் தவறு, பகுத்தறிவு சிந்தனைகள் ஊடாக மீள் கட்டவிழ்க்கப்படட்டும்.

பெண்ணின ஒடுக்கல் சார் ஓர் கண்ணோட்டம்.

ரா.தனஞ்சயன்
நுண்கலைத்துறை,
கிழக்கு பல்கலைக் கழகம்.