பெண்கள் உலகக்கிண்ணம்: இங்கிலாந்திடம் போராடி தோற்றது இந்தியா

இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற பெண்கள் 50 ஓவர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இந்தியா 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது.
இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற பெண்கள் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

நாணயசுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 228 ஓட்டங்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்சிவர் சிறப்பாக விளையாடி 51 ஓட்டங்களை எடுத்து ஆட்டம் இழந்தார். டெய்லர் 45 ஓட்டங்களை எடுத்தார். இந்திய அணி தரப்பில் கோஸ்வாமி 10 ஓவரில் 23 ஓட்டங்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்களும், பூனம் யாதவ் 10 ஓவரில் 36 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதனையடுத்து 228 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. தொடக்க வீரர் சுமிர்தி டக் அவுட் ஆனார். இதனை அடுத்து கேப்டன் மிதிலி ராஜுடன் பூனம் ராவுட் ஜோடி சேர்ந்தார். இறுதி போட்டியில் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மிதிலி 17 ஓட்டங்களில் விக்கெட்டை பறிக்கொடுத்தார்.

இதன் பிறகு பூனம் ராவுட் (86) கவுர் (51) வேதா கிருஷ்ணமூர்த்தி (35) ஓட்டங்களை சேர்த்து இந்திய அணியை வெற்றி பாதையை நோக்கி அழைத்து சென்றனர். இதனால் இந்திய அணி வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இறுதியில் 28 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களை இந்திய அணி தொடர்ந்து பறிகொடுத்தது. இதனால் இந்திய அணி 48.4 ஓவர்களில் 219 ஓட்டங்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை தழுவியது.

இங்கிலாந்து மகளிர் அணி 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று நான்காவது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது. இந்திய அணி தோல்வி அடைந்தது ரசிகர்களிடையே பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]