மட்டக்களப்பு புழுட்டுமானோடை குள அணைக்கட்டினை உயர்த்தும் வேலைத்திட்டத்தை மட்டு. மாவட்ட அரசாங்க அதிபர் ஆரம்பித்து வைத்தார்.

புழுட்டுமானோடை , மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புழுட்டுமானோடை குளத்தின் அணைக்கட்டினை உயர்த்தி அதிக நீர்ப்பாசனத்தினை மேற்கொள்வதற்கான புனருத்தாரணத் திட்டத்தினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் ஆரம்பித்து வைத்தார்.

கமநல அபிவிருத்தித்திணைக்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் இந்த அபிவிருத்தித்திட்டத்திற்கு 19மில்லியன் செலவிடப்படவுள்ளது.

புழுட்டுமானோடை

3 வான்கதவுகளுடன் 12அடி உயரமும், 900 மீற்றர் நீளமான இக் குளத்தின் தற்போதைய அணைக்கட்டு, மேலும் நீர் பாய்ச்சுவதற்கான 3 கதவுகளுடன் மேலும் ஒரு மீற்றர் உயர்த்தப்படவுள்ளது.

இதன்போது, கமநல சேவைகள் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பிரதி ஆணையாளர் பொறியியலாளர் என். சிவலிங்கம், கமநல அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

1979ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட இக்குளமானது கடந்த காலங்களில் பல தடவை உடைப்பெடுத்துள்ளது. அவ்வேளைகளில் புனரமைப்புகள் நடைபெற்றும் பயனற்ற நிலையே காணப்பட்டது.

இந்த நிலையில் மாவட்ட செயலகத்தின் ஊடாக கடந்த 2015ஆம் ஆண்டு அணைக்கட்டு மற்றும் நீர் பாய்ச்சுவதற்கான 3 வான்கதவுகளுடன் புழுட்டுமானோடைக்குளம் அமைக்கப்பட்டது.

கடந்த 2016ஆம் ஆண்டு இக் குளத்தின் மூலம் பெரும் போகத்தில் 2000 ஏக்கருக்கும், சிறுபோகத்தில் 1200 ஏக்கருக்கும் நீர்ப்பாசனம் மேற்கொள்ளப்பட்டது. தற்போது நடைபெறவுள்ள அணைக்கட்டு உயர்த்தலின் மூலம் மேலும் 300 ஏக்கருக்கு நீர்ப்பாசனம் மேற்கொள்ள முடியும் என்று கமநல சேவைகள் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பிரதி ஆணையாளர் பொறியியலாளர் என் சிவலிங்கம் தெரிவித்தார்.

இப்பிரதேசத்தில் வந்தாறுமூலை, சித்தாண்டி, கொம்மாதுறை, மாவடிவேம்பு, வேப்பவெட்டுவான் உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த விவசாயிகள் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான கால்நடை வளர்ப்பு பிரதேசம் என்ற வகையில் இக் குளம் அமைக்கப்பட்டதன் மூலம் சுமார் 30ஆயிரம் வரையான கால்நடைகளின் நீரத்தட்டுப்பாடு கடந்த வருடங்களிலிருந்து தவிர்க்கப்பட்டுள்ளது. அதே போன்று யானை, மான், பன்றி உள்ளிட்ட வன விலங்குகளும் பயன்பெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]