புலம்பெயர் தமிழர்கள் வழங்கிய உதவிப்பணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வசந்த மாளிகை கட்டி ஆடம்பரமாக வாழ்கின்றார்?

தமிழ் மக்களது வாக்குகளைப்பெற்றுக்கொண்ட பிரதிநிதிகள் தாம் சுகபோகங்களை அனுபவிக்கிறார்களேதவிர மக்களுக்காக எதனையும் சாதிக்கவில்லை. இதனை அறிந்து தமிழ்ப் பிரதேசங்களின் அபிவிருத்தியை இலக்காகக்கொண்டு ‘ எமது புதிய தலைமுறைக்கட்சி” என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பது அவசியமற்றது. இது தமிழர்களுக்குச் செய்யும் துரோகம். மாகாணங்கள் இணைக்கப்பட்டால் இனப்பரம்பலின்படி இரண்டு தமிழ் முதலமைச்சரை ஒருவராக்கும் செயலே என்றும் அவர் கூறினார்.

‘எமது புதிய தலைமுறைக்கட்சி” என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கட்சியின் முதலாவது செய்தியாளர் சந்திப்பில் இக்கருத்து தெரிவிக்கப்பட்டது. மட்டக்களப்பு கொம்மாதுறை பிரதேச உல்லாச விடுதியில் செவ்வாய்க்கிழமை (29) இச்செய்தியாளர் மாநாடு நடைபெற்றது.

இவர் இங்கு மேலும் கருத்துக்கூறுகையில்- இலங்கையில் நான் அறிந்து 9 மாகாணங்கள் உள்ளன. அவற்றுக்கொன தனித்தனி சபைகள் மற்றும் முதலமைச்சர்கள் உள்ளார்கள். வடக்கு கிழக்கு இணைக்க வேண்டும் என்பது அறிவீனமான வாதம், வடக்கு கிடக்கில் இரண்டு சிறுபான்மை சமூக முதலமைச்சர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் கிடைக்க வேண்டிய வாய்ப்பை இந்த இணைப்புக் கோரிக்கை என்பது இல்லாதொழித்துவிடும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளார்கள் ஆனால் இந்த அரசியல்வாதிகள் தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. ஆனால் அவர்கள் புலம்பெயர் தமிழர்கள் வழங்கிய உதவிப்பணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வசந்த மாளிகை கட்டி ஆடம்பரமாக வாழ்கின்றார். இலங்கையில் எந்த நகர பகுதிகளிலும் இல்லாதவாறு குடிசை வீடுகள் மலசலகூடங்கள் கூட இல்லாத நிலை மட்டக்களப்பில் உள்ளது.

முடிவுறாமலும், எதுவித தீர்வுமில்லாமலும் தொடர்கதையாகியுள்ள நாட்டு மக்களின் அநேக பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய அரசியல் வழிநடத்தல்கள் இல்லாத குறை நீண்ட காலமாக நிலவி வருகின்றது.

சம காலத்தில் அவசியமும் அவசரமுமான இத்தேவையைக் கருத்திற் கொண்டு எழுந்த சிந்தனையொட்டத்தின் அடிப்படையிலும் மக்களின் ஆதங்கத்தின் அடிப்படையிலும் புதிய போக்கில் சிந்தித்து செயற்படக் கூடிய மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியல் கட்சியொன்றின் தேவை உணரப்பட்டுள்ளது.

அதன் காரணமாக புத்தாக்கம் மிக்க புதிய அரசியல் கட்சியாக எமது தலைமுறைக் கட்சி எனும் பெயரில் இக்கட்சி ஆரம்பிக்கப்படுகிறது. இந்த தேசத்தின் அடுத்து வரும் தலைமுறை அழிவுகளைக் கடந்து ஆக்கபூர்வமாக இந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்.

இன, மத, சாதி. மொழி, பிரதேச, பால் ரீதியான அனைத்து வகைப் பாகுபாடுகளையும் ஓரங்கட்டல்களையும் களைந்து நேசம் மிக்க தேசத்தின் புதல்வர்களாக அமைதியும் அபிவிருத்தியும் மிக்க இலக்கை நோக்கிச் செல்வதே இக்கட்சியின் குறிக்கோளாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கருணா அம்மானின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி, சிவநேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையா) னின் ரீஎம்விபீ கட்சியும் எமக்கு எதிர்ப்புத் தெரிவிக்கலாம். நாங்கள் தேசிய மட்டத்தில் தமிழர்களைப்பிரதிநிதித்துவப்படுத்தி செயற்படவுள்ளோம். அவர்கள் பிராந்தியக்கட்சிகளையே வழிநடாத்துகிறார்கள். இதனால் அவர்களது எதிர்ப்பு ஒரு பொருட்டல்ல.

எனவே எதிர்வரும் காலங்களில் அமைதியை விரும்பும் இலங்கையர் அனைவரும் புதிய தலைமுறைக் கட்சியில் இணைந்து நாட்டுக்கு புதிய அரசியல் கலாசாரத்தை வழங்குவதில் பங்களிப்புச் செய்வார்கள் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாளன் அல்பொன்சு பொருளாளர் திருமதி வேலுப்பிள்ளை சுமங்கலா ஆகியோரும் பிரசன்னமாயிருந்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]