புலம்பெயர் தமிழர்கள் இலங்கை வாழும் தமிழர்கள் மீது அக்கறை உள்ளவர்களாயின் வடக்கில் முதலீடு செய்ய முன் வரவேண்டும்

புலம்பெயர் தமிழர்கள் இலங்கை வாழும் தமிழர்கள் மீது அக்கறை உள்ளவர்களாயின் வடக்கில் முதலீடு செய்ய முன் வரவேண்டும்.

இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் அபிவிருத்தியில் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் உண்மையிலேயே அக்கறை உள்ளவர்கள் என்றால் வடக்கில் முதலீடுகளை செய்ய அவர்கள் முன்வர வேண்டும் என சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோண் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறை அமைச்சின்கீழ் யாழ் மாவட்டத்தில் விருந்தோம்பல் பயிற்சியினை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதல் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சின் கீழுள்ள இலங்கை சுற்றுலா கற்கை நிறுவனத்தின் கீழ் விருந்தோம்பல் முகாமைத்துவ பயிற்சி நெறிகள் கடந்த ஒரு மாத காலமாக யாழ் மாவட்டத்தில் இடம்பெற்றது.

மூன்று பிரிவுகளாக இடம்பெற்ற இந்த விருந்தோம்பல் முகாமைத்துவ கற்கை நெறியில் சுமார் நூற்றி இருபது மாணவர்கள் பயிற்சிகளை பெற்றுக்கொண்டனர்.

இவ்வாறு பயிற்சிகளை நிறைவு செய்தவர்களிற்கான சான்றிதல் வழங்கும் நிகழ்வு இலங்கை சுற்றுலா கற்கை மையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் புத்திக்க கேவவாம் தலைமையில் யாழ் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் இடம்பெற்றது.

இதில் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோண் அமரதுங்க வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டு சான்றிதல்களை வழங்கி வைத்தனர்.

வடக்கிலுள்ள சுற்றுலா மையங்களை தொன்மை மாறாத வகையில் புனரமைப்பதற்கு தம்முடன் ஒத்துழைப்பை வழங்குமாறு வடமாகாண முதலமைச்சரினால் இன்று விடுடுக்கப்பட்ட வேண்டுகோளையும் ஏற்றுக்கொண்ட அமைச்சர் அதற்கான சகல நிதி மற்றும் உதவிகளை தாம் மேற்கொள்வதாகவும் வாக்குறுதி வழங்கினார்.

சுற்றுலா கற்கை மைய தலைவர் சுனில் திஸ்ஸநாயக்க யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ விரிவுரையாளர் வேல்நம்பி உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஊடகங்களின் கேள்விக்கும் அமைச்சர் ஜோண் அமரதுங்க பதிலளித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]