புன்னைக்குடா கடற்கரையோர பிரதேசத்தில் ஆர்ட்டிலறி படைத்தளம் நிலை கொள்ள அனுமதிக்க முடியாது அமைச்சர் றவூப் ஹக்கீம்

மட்டக்களப்பு புன்னைக்குடா கடற்கரையோர பிரதேசத்தில் இராணுவ ஆர்ட்டிலறி படைப்பிரிவின் படைத்தளம் நிலை கொள்ள அனுமதிக்க முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஏறாவூர் பிரதேசத்தின் காணி விவகாரம் சம்பந்தமாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து செவ்வாய்க்கிழமை கருத்துத் தெரிவித்த அவர் இந்த விவரங்களைக் கூறினார்.

இதுபற்றி மேலும் கூறிய அவர், சுமார் 8 சதுர கிலோமீற்றர் எனும் மிகக் குறுகிய நிலப் பரப்பளவில் சுமார் 53 ஆயிரம் மக்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள்.

இப்பிரதேசத்தில் காணிப்பற்றாக்குறை என்பது விஸ்ரூபம் எடுக்கும் ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது.

அதேவேளை அநேக அரச முகவர்கள் தங்களை இப்பிரதேசத்தில் நிலைப்படுத்திக் கொள்வதற்காக இப்பிரதேசத்திலுள்ள காணிகள் மீது அவதானம் செலுத்தி வருகின்றார்கள்.

இலங்கை இராணுவமாக இருக்கும் அதில் ஒரு தரப்பு, தங்களது ஆர்ட்டிலறி படைப் பிரிவை புன்னைக்குடா கடற் கரையோரத்தோடு அண்டிய பகுதிகளிலுள்ள எல்.ஆர்.சி. க்கு (டுயனெ சுநகழசஅள ஊழஅஅளைளழைn – காணி நிர்ணய ஆணைக்குழு) உரித்தான காணிகளைக் கைப்பற்றி அங்கே நிலை கொள்ள விரும்புகிறார்கள்.

அதேவேளை, புன்னைக்குடா கடற்கரையோரமெங்கும்’ பரந்து கிடக்கும் அக்காணிகள், காணி நிர்ணய ஆணைக்குழுவுக்குச் சொந்தமானவை. அக்காணிகள் ஏற்கெனவே வர்த்தக முதலீட்டுச் சபைக்கு ஒப்படைக்கப்பட்டும் உள்ளன.

படையினர் தங்களது ஆர்ட்டிலறிப் பிரிவை நிலை நிறுத்திக் கொண்டு தளம் அமைப்பதற்கு கடற் கரையோரங்களைத் தவிர்;த்து உட்பிரதேசங்களைத் தேர்ந்தெடுக்க முடியும்.

ஏறாவூர்ப்பற்று பதுளை வீதியை அண்டிய பிரதேசங்களிலே போதியளவு அரச காணிகள் உள்ளன. அவற்றில் தங்களுக்குத் தோதான இடத்தில் படையினர் தங்களது தளத்தை அமைத்து நிலை கொள்ள முடியும்.

இது ஒரு உலகின் ரம்மியமான கடற் காட்சிப் பிரதேசங்களில் ஒன்று என்பதால் சிலவேளை படையினர் எந்நேரமும் கடற்பிரதேசத்தை நோட்டமிடுவதற்கு இப்பிரதேசத்தை தோதான சௌகரியமான இடமாகத் தேர்ந்தெடுத்திருக்கக் கூடும்.

இது விடயமாக ஏற்கெனவே பிரதேச படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மற்றும் படை அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளோம்.

கிழக்கு மாகாண ஆளுநருக்கும் நன்கறிந்த இந்த விடயம் சம்பந்மாக ஏற்கெனவே, பிரதமந்திரியின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதேவேளை, மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டிய பிரதேசங்களில் அசாதாரண சூழ்நிலை நிலவிய யுத்த காலப் பகுதியில் இந்தப் பகுதியை விட்டு காலி செய்து கொண்டு பாதுகாப்புத் தேடி வந்தவர்களின் காணிகள் அக்காணிகளுக்கு உரிமையாளரல்லாத வேறு சிலரால் பலாத்காரமாக கையகப்படுத்தப்பட்ட விடயங்களும் உள்ளன.
இவற்றையும் ஒரு ஆக்கபூர்வமான வழிகளைக் கையாண்டு தீர்வு காண்பதற்கு வழிகோலப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டு வருகின்றது.” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]