புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இலங்கை போக்குவரத்துச் சபை , தனியார் பஸ்கள் மற்றும் ரயில் விசேட சேவைகள் நடத்தப்படுமென்றும் தலைமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புத்தாண்டை முன்னிட்டு
தமது சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக இந்த சேவைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரயில்வே திணைக்களத்தின் முகாமையாளர் விஜய சமரசிங்ஹ கருத்துத் தெரிவிக்கையில், ஏப்ரல் மாதம் 7ம் திகதி முதல் 17ம் திகதி வரையில் வழமையான ரயில் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமென்று தெரிவித்தார்.

புதிய நேர அட்டவணைக்கமைவாக இந்த சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கை போக்குவரத்துச் சபையின் விசேட பஸ் சேவை ஏப்ரல் மாதம் 6ம் திகதி முதல் 25ம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக அதன் தலைவர் ரமால் சிறிவர்த்தன குறிப்பிட்டார்.

பியகம, கட்டுநாயக்க, மீரிகம போன்ற தொழில் பேட்டைகளுக்கு அருகாமையில் இருந்து விசேட பஸ் சேவைகள் நடத்தப்படவுள்ளன.

இதற்கு மேலதிகமாக தனியார் பஸ் சேவை ஏப்ரல் மாதம் 7ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படுமென்றும் அமைச்சின் ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி.ஹேமச்சந்திர தெரிவித்தார்.