புது வருடத்தின் தித்திப்பான வாழ்த்துக்கள் ஐஸ்வர்யா தனுஷுக்கு!

 

புது வருடத்தின்  தித்திப்பான வாழ்த்துக்கள் ஐஸ்வர்யா தனுஷுக்கு!

உலகமே உற்சாகமாக கொண்டாடி வரும் ஒவ்வொரு புத்தாண்டும், ரஜினி குடும்பத்திற்கு மட்டும் சிறப்பு புத்தாண்டாக இருப்பதுண்டு. ஆம், புத்தாண்டு தினத்தில்தான் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் மூத்த மகள் ஐஸ்வர்யா பிறந்தார்.

இந்த இனிய பிறந்த நாளில் அவருடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற்று இந்த ஆண்டு அவருக்கு வெற்றிகரமான ஆண்டாக இருக்க நமது உளங்கனிந்த வாழ்த்துக்கள்

ரஜினியின் மகளாக இருந்தாலும் தனித்தன்மையுடன் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ஐஸ்வர்யா. முதலில் பாடகராக அறிமுகமாகி அதன்பின்னர் செல்வராகவனின் உதவி இயக்குனராக இணைந்தார்.

பின்னர் கணவர் தனுஷ் மற்றும் கமல் மகள் ஸ்ருதிஹாசன் நடித்த ‘3’ படத்தை இயக்கினார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் ஒரு வித்தியாசமான இயக்குனர் என்ற பெயரை பெற்றார். அதன் பின்னர் ஆக்சன் மற்றும் விறுவிறுப்பு கலந்து ‘வை ராஜா வை’ என்ற வெற்றி படத்தை இயக்கினார். இந்த ஆண்டு அவர் இந்தியாவின் ஒலிம்பிக் நாயகன் ‘மாரியப்பன்’ வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

திரைத்துறை மட்டுமின்றி சமூக அக்கறை உள்ளவர் ஐஸ்வர்யா தனுஷ். அவருடைய சமூக சேவை மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்காக அவர் செய்த சேவையினை  அறிந்த ஐ.நா, அவருக்கு ஐ.நா.சபையின் பெண்களுக்கான நல்லெண்ண தூதர் என்ற பதவியை கொடுத்து கெளரவித்தது. இந்த பதவியை பெறும் முதல் இந்திய பெண் ஐஸ்வர்யா என்பது குறிப்பிடத்தக்கது. தென்னிந்திய பெண்களின் நிலையை சர்வதேச சமூகத்திற்கு கொண்டு செல்வது, அவர்களின் உரிமைக்காக ஐ.நா. சபையில் குரல் கொடுப்பது போன்ற பணிகளை ஐஸ்வர்யா மேற்கொண்டு வருகிறார்.

மேலும் இதுவரை திரையுலகில் யாருமே யோசித்து பார்க்காத ‘சண்டைக்கலைஞர்களுக்கு தேசிய விருது’ என்ற தனது ஐடியாவை மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவிடம் தெரிவித்தவர் ஐஸ்வர்யா தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய கோரிக்கை ஏற்கப்பட்டு இந்த ஆண்டு முதல் சண்டைக்கலைஞர்களுக்கும் தேசிய விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி சினிமா சண்டை கலைஞர்களின் வாழ்க்கையை ஆவணப்படமாக எடுத்தவர் ஐஸ்வர்யா தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடகி, இசை அமைப்பாளர், சமூக சேவகர், திரைப்பட இயக்குநர் என்று பன்முக தன்மை கொண்ட ஐஸ்வர்யா தனுஷ் மென்மேலும் பல வெற்றிகள் பெற மீண்டும் ஒருமுறை நமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.