புதிய உள்ளூராட்சிசபைகள் சட்டமூலம் 24இல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

மறுசீரமைக்கப்பட்ட புதிய உள்ளூராட்சிசபைகள் சட்டமூலம் எதிர்வரும் 24ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

உள்ளூராட்சிசபைகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தப்பாவால் இந்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

சிவில் அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை உள்ளடக்கிய வகையில் புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் தேசிய அரசின் பங்காளி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் பொது இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

2012ஆம் ஆண்டு அப்போதைய பொருளாதார அமைச்சராகவிருந்த பஸில் ராஜபக்ஷவால் மேற்கொள்ளப்பட்ட எல்லை நிர்ணயம் பாரிய சிக்கல் நிறைந்ததாகவும், சிறுபான்மைச் சமூகங்களின் பிரதிநித்துவங்களை குறைக்கும் வகையில் அமைந்தமையால் இதற்கு எதிராக குரல்லெழுப்பட்டு வந்தது. தற்போதைய அரசின் கீழ் நியமிக்கப்பட்ட எல்லை நிர்ணய குழு ஒருவருட காலத்திற்கு மேல் எல்லை நிர்ணயத்தை மேற்கொண்டு கடந்த டிசம்பர் மாதம் துறைசார் அமைச்சர் பைஸர் முஸ்தப்பாவிடம் எல்லை நிர்ணய அறிக்கையை சமர்ப்பித்திருந்தது.

அதன் அடிப்படையில் பல்வேறு இழுப்பறிக்கு மத்தியில் தயாரிக்கப்பட்டுவந்த சட்டமூலம் எதிர்வரும் 24ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. 60வீதம் தொகுதிவாரி முறை அடிப்படையிலும், 40வீதம் விகிதாசார முறை அடிப்படையிலும் தேர்தல் நடைபெறவுள்ளது. அத்துடன், பெண்களுக்கு 25வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

உள்ளூராட்சித் தேர்தலை நடத்துமாறு சிவில் அமைப்புகளும் பொது எதிரணி உள்ளிட்ட சில அமைப்புகளும் கடும் அழுத்தம் கொடுத்துவரும் நிலையில் சட்டமூலத்தை நிறைவேற்றி உடனடியாக தேர்தலுக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]