புதிய அரசாங்கத்தை அமைக்கும் பேச்சுகளில் பங்கேற்காத கூட்டமைப்பு

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக நடக்கும் எந்தவொரு பேச்சுக்களிலும் பங்கேற்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை என்று கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

“பெப்ரவரி 10 தேர்தலுக்குப் பின்னர், அரசாங்கத்தை அமைப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை வாங்கும் தற்போதைய சூழல் வெறுப்பை ஏற்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ள அவர், “அரசாங்கத்தை அமைப்பதற்கான எந்தவொரு பேச்சுக்களிலும் பங்கேற்க கூட்டமைப்பு விரும்பவில்லை” என்றும் கூறியுள்ளார்.

“பெருமளவு பேச்சுக்களை நடந்து கொண்டிருப்பதை நாம் அறிவோம். என்ன நடக்கப் போகிறது என்று எமக்குத் தெளிவாகத் தெரியவில்லை. எனவே, யாருக்கு ஆட்சியமைக்கும் ஆற்றல் உள்ளது என்பதை அறிய நாம் காத்திருப்போம். அதன் பின்னர் என்ன செய்வது என்று முடிவு செய்வோம்.” என்று கூறினார்.

“ஜனநாயக மறுசீரமைப்பு, ஊழலுக்கு எதிரான நடவடிக்கை, யாராக இருந்தாலும், தண்டனையில் இருந்து தப்பிப்பதற்கு எதிரான கொள்கைகளுக்கு ஆதரவளிப்பவர்களுக்கு கூட்டமைப்பு ஆதரவு அளிக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.