புதிய அரசமைப்பொன்று கொண்டுவரப்படாமல் இனப்பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வுகாண முடியாது – சுமந்திரன்

புதிய அரசமைப்பொன்று கொண்டுவரப்படாமல் இனப்பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வுகாண முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பிபிசி சிங்கள சேவையான சந்தேசயவுக்கு வழங்கியுள்ள செவ்வியில் கூறியுள்ளார்.

எம்.ஏ.சுமந்திரன்
எம்.ஏ.சுமந்திரன்

தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டுமாயின் புதிய அரசமைப்பொன்று கொண்டுவரப்பட வேண்டியது அவசியமானது. 1972ஆம் ஆண்டு அரசமைப்போ அல்லது 1978ஆம் ஆண்டு அரசமைப்போ கொண்டுவரப்பட்ட போது தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டிருந்தனர். நாம் புதியதொரு யுகத்துக்குள் செல்வதென்றால் புதிய அரசமைப்பொன்றை கட்டாயம் இந்த நாட்டில் கொண்டுவர வேண்டும்.

பெரும்பான்மையான மக்கள் அரசமைப்பை மாற்றுவதில் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. ஏனென்றால் தலைவர்களை இந்த விடயத்தை மக்களுக்குக் கொண்டு செல்லவில்லை என்பதுடன், மக்களிடம் பொய்யான பிரச்சாரங்களையும் கட்டவிழ்த்து விடுகின்றனர்.

இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து உருவாக்கியுள்ள கூட்டு அரசாங்கமானது, புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கு இந்த பெறுமதிமிக்க வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிடின் எதிர்காலம் பாரதூரமானதாக அமையும்.

எம்.ஏ.சுமந்திரன்
எம்.ஏ.சுமந்திரன்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்பட வேண்டும். சிறுபான்மையினர் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு நிறைவேற்று அதிகார ஆட்சிமுறை நல்லது என்ற கருத்து பிழையானது.

தேர்தல்களின் போது சிறுபான்மையினரின் ஆதரவு தேவைப்பட்டாலும் கூட ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படும் ஒவ்வொருவரும் பெரும்பான்மையினருக்காகவே பணியாற்றுகின்றனர். இந்த முறையின் ஊடாக சிறுபான்மையினர் நீதியைப் பெற முடியும் என்பது தவறானது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]