புதிய அரசமைப்பு மூலம் நிரந்தர தீர்வு கிடைக்கும் : சம்பந்தன் நம்பிக்கை

புதிய அரசமைப்பு மூலம் நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

‘த ஹிந்து’ பத்திரிகைக்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்டவாறு கோரியுள்ளார்.

இலங்கை தொடர்பான இந்தியாவின் நலன்கள் என்பது பொருளாதாரம் மற்றும் மூலோபாய விடயங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்ப்பதிலும் இந்தியா அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது என நாம் கருதுகின்றோம்.

இலங்கையில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், பறங்கியர்கள் எனப் பல்வேறு இன மக்கள் வாழ்கின்றார்கள். ஒவ்வொருவருக்கும் தனித்துவமான இன, கலாசார மொழி அடையாளங்கள் உள்ளன. வடக்கு – கிழக்கு வரலாற்று ரீதியாக தமிழ் பேசும் மக்களைக் கொண்டது.

அதன் அடிப்படையில் இலங்கை அரசின் ஒத்துழைப்புடன் இரண்டு மாகாணங்களையும் இணைத்து, அதிகாரங்கள் பகிரப்படும் பிரிவாக அமைக்க வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு கட்டாயம் இணைக்கப்பட வேண்டும். அதிகாரப் பகிர்வு விடயத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனடிப்படையிலேயே வடக்கு, கிழக்கிலுள்ள மக்கள் சுயாட்சிக் கோரிக்கையை நீண்டகாலமாக முன்வைத்து வருகின்றனர். இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கையில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தும் வகையிலான சரத்திற்கு நாம் எதிர்ப்பு வெளியிட்டிருந்தோம்.

ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டிருக்காவிட்டால் இந்த உடன்படிக்கை முழுமையாக அமுல்படுத்தப்பட்டிருக்கும். சர்வஜன வாக்கெடுப்பை நடத்தாமலேயே இனப் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்திருக்கக் கூடும். எனினும், துரதிஷ்டவசமாக சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர் அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் அங்கீகரிக்கப்படவில்லை. இந்தத் திருத்தம்கூட திருப்தி அளிக்கக்கூடிய வகையில் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]