புதிய அமைச்சரவை இன்று நியமனம்

புதிய அமைச்சரவை இன்று நியமனம்அமைச்சரவை மறுசீரமைப்பு இன்று முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ள நிலையில், காலை 9.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஆஜராகுமாறு அமைச்சர்கள் மற்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து புதிய அமைச்சரவை நியமனங்கள் அறிவிக்கப்படும் என அரசாங்க தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஐதேக- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டு அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர், இடம்பெறவுள்ள இரண்டாவது அமைச்சரவை மாற்றம் இதுவாகும்.

கடந்த பெப்ரவரி மாதம் உள்ளூராட்சித் தேர்தலில் ஆளும் கட்சிகளுக்கு ஏற்பட்ட பின்னடைவுகளை அடுத்து, கடந்த சிலமாதங்களாக நிலவி வந்த குழப்ப நிலைகளின் தொடர்ச்சியாக இந்த அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளது.

இன்றைய அமைச்சரவை மாற்றத்தின் போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வசம் இருந்த சமுர்த்தி அமைச்சு ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படவுள்ளது. கலாசார விவகார அமைச்சு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கப்படவுள்ளது.

அதேவேளை, மத்திய வங்கி பிணை முறி மோசடி குற்றச்சாட்டை அடுத்து பதவி விலகிய முன்னாள் நிதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும் அமைச்சர் பதவியை வழங்குமாறு ஐ.தே.க கோரியிருந்தது.

அதற்கு ஜனாதிபதி எதிர்ப்புத் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இன்று பதவியேற்கும் அமைச்சரவையில் ஐதேகவைச் சேர்ந்த 32 பேரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 10 பேரும் இடம்பெறுவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]