‘பிள்ளையார் பிடிக்கப்போய், குரங்கான கதைதான் இங்கு நடந்தேறியுள்ளது – டக்ளஸ் தேவானந்தா!

குளிர்பானங்களில் சீனியின் அளவினைக் கட்டுப்படுத்துவது எனக் கூறப்பட்டு, அதற்கு மேலதிக வரி விதிக்கப்பட்டது.

இறுதியில் அதனது பெறுபேறுகள் என்னவாயிற்று? எனக் கேட்க விரும்புகின்றேன். இன்று சிறியதொரு குளிர்பான போத்தல் 10 ரூபாவினால் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏனையவை 30 ரூபா முதல் 50 ரூபா வரையில் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டு, சீனியின் அளவு குறைந்த குளிர்பானங்கள் என்ற வகையிலான சிறிய போத்தல்கள் 80 ரூபாவிற்கு விறகப்படுகின்றன. இறுதியில் ‘பிள்ளையார் பிடிக்கப்போய், குரங்கான’ கதைதான் இங்கு நடந்தேறியுள்ளது.

இந்த நாட்டு மக்களின் மாதாந்த சீனிப் பாவனையானது சுமார் 35 மெற்றிக் டொன் என்ற நிலையில், அரசுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்ட இரு வர்த்தகர்கள் கடந்த ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் 1 இலட்சம் தொன்னுக்கும் அதிகளவில் சீனியை இறக்குமதி செய்திருப்பதாகவும், இதன் காரணமாக சீனியின் விலை மேலும் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிய வருகின்றது.

தற்போது ஒரு கிலோ சீனிக்கான வரியாக 31 ரூபா அறவிடப்படுகின்ற நிலையில், மேலும் 6 ரூபாவினால் அதனை அதிகரிக்குமாறு மேற்படி வர்த்தகர்கள் வாழ்க்கைச் செலவுகள் தொடர்பான குழுவுக்கு அழுத்தங் கொடுத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு ஒரு சிலரின் தேவைகளுக்காக பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுகின்ற நிலையில், இந்த நாட்டின் அனைத்து மக்களுக்குமே அது பெரும் பாதிப்பாக அமைந்து விடுவது தொடர்பில் நீங்கள் கவலைப்படுவதாகத் தெரிய வில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கீழான விவாதம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]