பில்லா பாண்டி படப்பிடிப்பில் தொழிலாளர் பிரச்சினை!

‘பில்லா பாண்டி ‘ படப்பிடிப்பின் போது ஏற்பட்ட பிரச்சினை தீர்ந்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. இதில்உடனடியாகத் தலையிட்டு தீர்த்து வைத்த விஷால் மற்றும் செல்வமணி ஆகியோருக்கு ஆர்.கே.சுரேஷ் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

அதிவேக நாயகனாக வளர்ந்துவரும் ஆர். கே.சுரேஷ் நடித்து வரும் படம் ‘பில்லா பாண்டி ‘. ‘தர்மதுரை’க்குப் பிறகு ஸ்டுடியோ 9 தயாரிப்பில் அதிக பொருட்செலவில் உருவாகும் இப்படத்தில் நாயகன் ஆர்.கே.சுரேஷ் ஒரு அஜீத் ரசிகராக வருகிறார்.

இதன் படப் பிடிப்பு மதுரைப் பகுதிகளில் தொடங்கி நடை பெற்று வந்தது. ஜல்லிக்கட்டுக்குப் புகழ் பெற்ற வாடிவாசல் அமைந்துள்ள அலங்காநல்லூரில் நடைபெற்றுக் கொண்டிருந்தது . சரவண சக்தி இயக்கிக் கொண்டிருந்தார் . ஜீவன் ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தார்.

ஆர்.கே சுரேஷ், இந்துஜா, சாந்தினி, யோகிபாபு, நமோ நாராயணா, இயக்குநர் மாரிமுத்து ஆகியோர் நடித்துக் கொண்டிருந்தனர். தேர்த்திருவிழா நடப்பது போன்ற காட்சி படமாகிக் கொண்டிருந்தது. துணை நடிகர்கள் கூட்டம், பார்வையாளர்கள் கூட்டம் என் ஜனத்திரள் மிகுந்திருந்தது.

அப்படிப்பட்ட சூழலில் படப்பிடிப்பில் தொழிலாளர் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு தடைபட்டது. எப்போது படப்பிடிப்புக்குத் தடங்கல் ஏற்பட்டாலும் தயாரிப்பாளரே பாதிக்கப்படுவார் என்பது சினிமாவின் சோகம்.

இந்தப் பிரச்சினை குறித்து படத்தின் தயாரிப்பாளரும் நாயகனுமான ஆர்.கே. சுரேஷ் உடனடியாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மற்றும் திரைப்படத் தொழிலாளர் சங்கமான பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோரிடம் முறையிட்டு பிரச்சினையை எடுத்துச் சென்றார்.

அவர்கள் இருவரும் சம்பந்தப்பட்டவர்களை அழைத்தனர் . பேச்சு வார்த்தை நடத்தினர். பிரச்சினை சுமுகமாகத் தீர்த்து வைக்கப்பட்டது.

பில்லா பாண்டி

இரண்டு நாட்கள் தடைபட்டு நிறுத்தப் பட்டிருந்த பில்லா பாண்டி படப்பிடிப்பு இன்று மீண்டும் உற்சாகத்துடன் தொடங்கியது .

இப்பிரச்சினையில் உடனடியாகச் செயல்பட்டு தீர்த்து வைத்த தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மற்றும் பெப்ஸி தலைவர் ஆர்.கே. செல்வமணி ஆகியோருக்கு மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவிப்பதாக தயாரிப்பாளர் ஸ்டுடியோ 9 சுரேஷ் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]