முகப்பு Cinema பிரபல நடிகர் நந்தமுரி ஹரிகிருஷ்ணா கார் விபத்தில் பலி

பிரபல நடிகர் நந்தமுரி ஹரிகிருஷ்ணா கார் விபத்தில் பலி

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் என்.டி ராமாராவின் மகனும், நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையுமான நந்தமுரி ஹரிகிருஷ்ணா (61) கார் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தானது இன்று (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நெல்லூர் மாவட்டத்திலுள்ள கவாலி என்ற ஊரில் ரசிகர் ஒருவரின் திருமணத்துக்காக இன்று அதிகாலை ஹரிகிருஷ்ணா காரில் சென்று கொண்டிருந்தார்.

இதன்போது, நலகொண்டா மாவட்டத்தில் உள்ள நர்கெட்பள்ளி – அட்டன்கி நெடுஞ்சாலையில் எதிர்பாராதவிதமாக சென்டர் மீடியனில் கார் மோதியதையடுத்து விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் பலத்த காயமடைந்த ஹரி கிருஷ்ணா அருகில் உள்ள காமினேனி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2014-ம் ஆண்டு நலங்கொண்டா அருகே இடம்பெற்ற கார் விபத்தில்தான் ஹரிகிருஷ்ணாவின் மகன் ஜானகிராமும் மரணமடைந்தார். அவர் விபத்துக்குள்ளான இடத்துக்கு அருகிலேயே ஹரிகிருஷ்ணாவும் விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர முன்னாள் முதலமைச்சரும் நடிகருமான என்.டி ராமாராவின், நான்காவது மகன் நந்தமுரி ஹரிகிருஷ்ணா. குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய இவர், பின்னர் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து பணியாற்றினார். எம்.பி.யாகவும் இருந்துள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com