பிரதமர், அமைச்சரவைக்கு எதிரான ரிட் மனு வெள்ளிவரை ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னரும், பிரதமர் செயலகத்தை ஆக்கிரமித்துள்ள மகிந்த ராஜபக்ச மற்றும் அமைச்சரவைக்கு எதிராக, 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட உறுதிகேள் நீதிப்பேரணை மனுக்கள் மீதான விசாரணை வரும் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை மற்றும் டிசெம்பர் 3ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது.

இந்த மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தன. பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டவாளர்கள் தமக்கு மனுதாரரின் அறிவித்தல் கிடைக்கவில்லை என மன்றுரைத்தனர்.

அதனால் மனுக்கள் மீதான விசாரணையை வரும் 30 மற்றும் 3ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுக்கப்படும் என்று அறிவித்து மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு ஒத்திவைத்தது.

மனுவில் மகிந்த ராஜபக்ச, அமைச்சரவை அமைச்சராகப் பதவி வகிப்போர், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களாகப் பதவி வகிப்போர் என 49 பேர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜேவிபி ஆகியவற்றின் 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனுவில் சத்தியக்கூற்று இணைத்து மனுதாரர்களாகக் குறிப்பிட்டுள்ளனர்.

மகிந்த ராஜபக்ச பிரதமராகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவை அமைச்சர்களாகவும் செயற்படுவதற்கு இடைக்காலத் தடை உத்தரவு வழங்குமாறு மனுதாரர்களால் இடைக்கால நிவாரணமாக மனுவில் கோரப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.கனகஈஸ்வரன் தாக்கல் செய்த இந்த மனு (CA (Writ) 263/2018) என இலக்கமிடப்பட்டுள்ளது.

அதேவேளை, பேராசிரியர் சரத் விஜயசூர்ய சார்பில் மற்றொரு உறுதிகேள் நீதிப்பேராணை மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தாக்கல் செய்த இந்த மனு (CA (Writ) 262/2018) என இலக்கமிடப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]