பிரச்சினைகளுக்குத் தீர்வு காண சிந்தனையும் மனமும் திறந்த செயற்பாடுகள் அவசியம்

பிரச்சினைகளுக்குத் தீர்வு காண சிந்தனையும் மனமும் திறந்த செயற்பாடுகள் அவசியம்

தீர்வின்றித் தொடரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண சிந்தனையும் மனமும் திறந்த செயற்பாடுகள் அவசியம். தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா

யுத்தத்திற்கு முன்னரான, யுத்த காலத்து மற்றும் யுத்தத்திற்குப் பின்னரான நிலையில் தீர்வின்றித் தொடரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண சிந்தனையும் மனமும் கட்டாயம் தேவைப்படுவதாக தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்தார்.

ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சிப் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற கருத்தரங்கில் அவர் ஞரிற்றுக்கிழமை 19.08.2018 உரையாற்றும்போது இந்தக் கருத்தை வெளியிட்டார்.

பல வித கூட்டு செயல்பாட்டினூடாக மோதல் உருமாற்றத்திற்கான முன்னெடுப்பு எனும் சமாதான சகவாழ்வுச் செயற்திட்டத்தின் கீழ் அனுபவப் படிப்பினைகளை படைப்பாக்கம் செய்யும் எழுத்தாளர்களுக்கான பயிற்சி கருத்துப் பரிமாற்ற கருத்துருவாக்க நிகழ்வு சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இலங்கையின் சகல பாகங்களிலுமிருந்தும் தமது ஆக்கத் திறன்களைச் சமர்ப்பித்த பல்வேறு துறைகளில் பணியாற்றும் தமிழ் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த சுமார் 30 ஆக்கத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய கலாநிதி ஜெஹான் பெரேரா, தொடர்ந்து செல்லும் பிரச்சினைக்கான தீர்வினை இங்கு வாழும் அனைத்து சமூகங்களினதும் இதயங்கள் தேடாவிட்டால், அதற்கு அப்பால் நாங்கள் நகர முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலையேற்பட்டு விடும்.

நாட்டில் காணப்படுகின்ற பல்வேறு விதமான பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவதாயின் ஆரம்பமாக நாம் இதயத்தைத் திறக்க வேண்டும் மனம் திறந்தால் அதன் பின்னர் இயல்பாகவே அறிவு திறக்கும்.

எனவே அந்த அறிவைக் கொண்டு ஆக்கபூர்வமான முறையில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வைக் கண்டுவிட முடியும்.

தனிப்பட்ட வாழ்க்கையிலே ஏற்பட்ட சம்பவங்கள் சமாதான சகவாழ்வுக்கான இதயக் கதவுகளைத் திறக்கும் கருவிகளாக இருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. இது எனது வாழ்க்கையிலும் நடந்திருக்கின்றது.

எங்களுடைய சுய அனுபவங்டகளினூடாக மற்றவர்களுக்கு வாழ்க்கைப் பாடத்தை தெரியப்படுத்தலாம்.

எனது இளம் பராயத்தில் சுமார் 5 வயதிருக்கும் சிங்கள இலக்கண நூலில் “குமாரோதயா” எனும் துட்டுகெமுனு குமாரனின் வரலாற்று நூலை நான் அப்போது பெருஞ் சத்தமிட்டு வாசிப்பேன்.

அதிலே அவர் முடங்கிக் கொண்டு தூங்குகிறார். நீட்டி நிமிர்ந்து படு, என்று அவரது தாயார் விஹாரமகாதேவி சொன்னதும், எனக்கு அது இயலாது ஏனெ;னறால் வடக்கில் தமிழர்கள் இருக்கிறார்கள், தெற்கில் பெருங்கடலும் இருக்கிறது என்கிறார் துட்டுகெமுனு.

நான் பெரியவனாகும் போது எனது தந்தையைப் போல் கோழையாக இருக்கமாட்டேன். வடக்கிலே போய் தமிழர்களை அழிப்பேன். என்றவுடன் மகனே அப்படிச் செய்ய வேண்டாம் ஏனென்றால் வடக்கிலுள்ள தமிழர்கள் மிக குரூரமானவர்கள் என்று அவரது தாய் விஹாரமகாதேவி கூறுகிறார் இவ்வாறுதான் நாம் இளமைப் பருவத்தில் ஊட்டி வளர்க்கப்பட்டிருக்கின்றோம்.

ஆனால் என்னுடைய தாயார் இந்தக் கதையை நான் வாசிக்கும்போது மிகவும் அன்பாகவும் ஆதரவாகவும் எனக்குச் சொல்லி வைத்த விடயம் இவைகளை நம்ப வேண்டாம் என்பதுதான். உனது தந்தையின் மிக நெருக்கமான சிநேகிதர் ருத்ரா ராஜசிங்கம் ஐஜிபி யாக இருந்தவர். அவர் ஒரு தமிழர். என்றும் எனது தாயார் என்னை அரவணைத்து எனக்கு வழிகாட்டியிருக்கிறார்.

இதிலிருந்து ஒரு இனத்தவரை நாம் வெறுக்க முடியாது என்பது எனது வாழ்க்கைப் பாடமாக அமைந்திருந்தது.

எனவே. இத்தகைய சிந்தனைப் போக்குகளில் மாற்றங்களைக் கொண்டு வந்து அனைவரும் இதயத்தைத் திறந்து பேச வேண்டும்.

உண்மைகளைத்தான் உரத்துக் கூறவேண்டும் மாறாக புனைவுகளை அல்ல.

எனவேதான் இன நல்லிணக்கத்துக்காக சமாதான சகவாழ்வுக்காக இடம்பெற்ற எத்தனையோ தனிப்பட்ட அனுபவங்கள் இன்னமும் பேசப்படாமல் இருக்கின்றன. அவற்றை நாம் வெளியுலகுக்கு கொண்டு வந்து சமாதானத்தின் வழி மூலமாக இதயக் கதவுகளைத் திறந்து அறிவாயுதத்தைப் பயன்படுத்தி ஆக்கபூர்வமாகத் தீர்வு காணவேண்டும். அழிவுகளுக்கு முடிவு கட்டவேண்டும்” என்றார்.

இந்நிகழ்வுகளில் தேசிய சமாதானப் பேரவையின் கருத்திட்ட முகாமையாளர் சமன் செனவிரட்ன, திட்ட உதவி முகாமையாளர் ரஷிகா செனவிரெட்ன, சிரேஷ்ட திட்ட இணைப்பாளர் சாந்த பத்திரன,‪ பிரபல சிறுகதை எழுத்தாளரும் மொழி பெயர்ப்பாளருமான திக்வெல்லை கமால் உள்ளிட்ட இன்னும் பல எழுத்தாளர்கள் கலந்து கொண்டு தமது பின்னூட்டல்களை வழங்கினர்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]